ராகுல் காந்தியை மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக தேசிய துணை தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தரமாக கிண்டலடித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் வட மாநிலங்கள் முழுதும் மாபெரும் வெற்றியை பெற்ற பாஜகவிற்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மரண அடி விழுந்தது. இதையடுத்து தென் மாநிலங்களில் பாஜகவின் பலத்தை கூட்ட அந்த கட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக பாஜகவிற்கு சிம்மசொப்பனமாக திகழும் தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக செய்துவருகிறது. அந்தவகையில், நாகர்கோவிலில் நேற்று நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் கூட்டத்தில், சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

அந்த கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன்மூலம் ஒரே நாடு என்கிற கொள்கைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் பிரதமர் மோடி தியாகம் செய்துள்ளார். குமரி விவேகானந்தர் பாறைக்கு சென்று விவேகானந்தர் தியானித்த இடத்தில் நின்றபோது, அன்று நாட்டின் நலனுக்காக நரேந்திரர்(விவேகானந்தர்) பிரார்த்தனையில் ஈடுபட்டது நினைவுக்கு வந்தது. அன்று அந்த நரேந்திரர் நாட்டுக்காக பிரார்த்தனை செய்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார் என்று மோடியின் புகழ் பாடினார். 

பிரதமர் மோடியின் புகழ்பாடிவிட்டு, காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் விமர்சிக்காமல் சென்றால் அந்த உரை முழுமையடையாது அல்லவா? அதனால் பிரதமர் மோடியின் புகழ்பாடிய அடுத்த கணம், ராகுல் காந்தியின் ஆளுமையை கிண்டலடித்தார். 

ராகுல் காந்தி குறித்து பேசிய சிவராஜ் சிங் சவுகான், நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள், இல்லாத நாட்டை உருவாக்குவதுதான் நமது லட்சியம். காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாத நிலையில் தண்ணீரில் மூழ்கிய கப்பல் போல் அக்கட்சி சென்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸை கலைத்துவிடலாம் என்று மகாத்மா காந்தி கூறினார். மகாத்மா கண்ட அந்த கனவு, ராகுல் காந்தி மூலம் நிறைவேறி கொண்டிருக்கிறது என்று சிவராஜ் சிங் சவுகான் கிண்டலடித்தார். 

மக்களவை தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தலைவர் இல்லாததால் அக்கட்சியின் ஏராளமான நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். அதுமட்டுமல்லாமல் தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்ய, நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.