Shivaji Manimandapam must be opened by the Chief Minister
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு.
ஆனால், நடிகர் சங்கம் காலம் தாழ்த்தவே தமிழக அரசே முன்வந்து சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனிடையே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி சிவாஜி மணிமண்டத்தில் அமைத்தது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்த மணிமண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால், நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை அவரே திறந்து வைத்திருப்பார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இவ்வேளையில், நடிகர் சிவாஜி கணேசனுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவ்விழாவில் பங்கேற்பதே கலைச்சிகரம் சிவாஜி கணேசனுக்கு மரியாதையாக இருக்கும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது.
