தமிழகத்தில் பிளவுப்பட்டு பல அணிகளாக செயல்படும் அதிமுக, விரைவில் பாஜகவுடன் இணையும் என சிவசேனா எம்பி, மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பேசினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்தன. மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனி அணியை உருவாக்கியுள்ளார்.

அதிமுகவில் 3 அணிகள் உருவானதால், தேர்தல் ஆணையம், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை முடக்கியது.

இதற்கிடையில் சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அதிமுக டிடிவி.தினகரன் துணை பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது கட்சியின் சின்னம் பெறுவதற்காக டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து சசிகலா அணி, எடப்பாடி தலைமையில் செயல்பட்டது.

அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் உருவாகி வந்ததால், எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டும் இரு அணியும் இணையும் என ஓ.பி.எஸ். தரப்பினர் தெரிவித்தனர். அதன்படி 2 பேரையும், கட்சியில் இருந்து நீக்கியதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அரசு செயல்பட்டாலும், அதனை வழி நடத்துவது, பாஜக என பல்வேறு கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தபோதும், அதனை ஏற்கவில்லை.

இநநிலையில், தமிழகத்தில் பிளவுபட்டுள்ள அதிமுக விரைவில் பாஜகவுடன் இணையும் என சிவசேனா எம்பி ஆனந்த்ராவ் அத்சுல் மக்களவையில் நடந்த விவாதத்தின்போது தெரிவித்தார்.

மக்களவையில் நடந்த விவாதத்தில் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா எம்எபி ஆனந்த்ராவ் அத்சுல் பேசியதாவது:-

தற்போது, பீகார் அரசு பாஜகவுடன் இணைந்து விட்டது. அதேபோல் தமிழகத்தில் பிளவுப்பட்டு பல்வேறு அணிகளாக உள்ள அதிமுகவை ஒருங்கிணைக்க போராடும் இரு அணிகளும், விரைவில் பாஜகவுடன் இணைந்துவிடும். ஒரே சித்தாந்தம், ஒரே தலைவர் என்பதை நான் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.