Sheila Balakrishnan appear before the inquiry commission
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, அரசு கோப்புகளைப் பார்த்தாரா? என்றும், அரசு கோப்புகளில் ஜெ. கையெழுத்திட்டாரா? என்றும் தமிழக அரசின் ஆலோசகராக பணியாற்றிய ஷீலா பாலகிருஷ்ணனிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்தது
இந்த ஆணையம் முன்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதே போல், முன்னாள் தலைமை செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த டிசம்பர் 20 ஆம், ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால் அவர் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஷீலா பாலகிருஷ்ணன், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அரசு கோப்புகளை பார்த்தாரா? என ஷீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அரசு கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டாரா? என்பது போன்ற கேள்விகள் விசாரணை ஆணையத்தில் எழுப்பப்பட்டது. ஷீலா பாலகிருஷ்ணனிடம் சுமார் மூன்றரை மணி நேரமாக விசாரணை நடைபெற்றது.
