வாஜ்பாய், மோடி வரிசையில் தமிழக பாஜக இளம் தலைவர் SG சூர்யா.. ட்வீட் போட்டு பாராட்டி வாழ்த்திய அண்ணாமலை..!
தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் இளம் தலைவர்களுக்கு சர்வதேச அளவிலான அரசியல், தொழில், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரம் பன்முகத்தன்மையையும் மேம்படுத்துவதே IVLP இன் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச இளம் அரசியல் தலைவர்கள் பயிற்சி முகாமிற்கு தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
IVLP என்று சொல்லப்பட்டும் இந்த சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமை அமெரிக்க அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறது. இதற்கு முன்னர் இதே பயிற்சிக்கு 1960-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், 1961ம் ஆண்டு இந்திரா காந்தியும், 1993-ஆம் ஆண்டு பிரதமர் மோடி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்கா சென்றுள்ளனர்.
பிரசித்தி பெற்ற இந்த திட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் 290 பேர் பல்வேறு நாடுகளில் இந்நாள் முந்நாள் தலைமை பொறுப்புகளை வகித்து வருகின்றனர். 2000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அமைச்சக பொறுப்புகளை பல்வேறு நாடுகளில் வகித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச இளம் அரசியல் தலைவர்கள் பயிற்சி முகாமிற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் SG சூர்யா பங்கேற்க உள்ளார். இதற்கு முன்பும் SG சூர்யா, 2018-ஆம் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சக அழைப்பின் பேரில் 10 நாட்கள் இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டிலும், 2019-ஆம் ஆண்டு இந்திய அரசின் பிரதிநிதியாக தென் கொரியாவில் 12 நாட்கள் இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டிலும் பா.ஜ.க சார்பாக கலந்துக்கொண்டார்.
இந்நிலையில், SG சூர்யா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உலகின் பிரசித்தி பெற்ற அமெரிக்க அரசின் IVLP நிகழ்ச்சிக்கு திறமைமிகு தமிழக பா.ஜ.க செயலாளர் SG சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாத காலம் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
2012ம் ஆண்டு குஜராத் மாநில தேர்தல் களத்தில் இன்றைய பிரதமர் மோடி அன்றைக்கு மீண்டும் குஜராத் முதல்வராக ஆட்சியில் அமர தகவல் தொழில் நுட்ப யுக்தி குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். இதுவரை இவர் பா.ஜ.க'விற்காக 10 சட்டமன்ற தேர்தல்களில் தனது பிரச்சார யுக்திகள் மூலம் பங்களித்துள்ளார். SG சூர்யா ஒரு எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை அரசியல் சார்ந்து 7 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரின் வீர சாவர்க்கரின் வரலாற்று குறிப்பு நூலும், பா.ஜ.க வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததன் உத்திகளை விவரிக்கும் “பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு” புத்தகமும் பெரிதாக போற்றப்பட்டது.