ஜெயலலிதா அ.தி.மு.க.வை ஆண்ட காலத்தில், தன் கட்சி நிர்வாகிகள் மீது வேறு எந்த விதமான புகார் வந்தாலும் கூட மன்னித்துவிடுவார். ஆனால் பாலியல் ரீதியான புகார் வந்தால், அவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் பல்லைப் பிடுங்கி, முடக்கி ஒரு ஓரத்தில் உட்கார வைத்துவிடுவார். 

ஜெ.,வின் கடந்த ஆட்சியின் போது மிக முக்கியமான ஒரு அமைச்சர் ‘அந்த’ புகாரில் சிக்கிவிட்டார். தட்டி தூர எறிந்துவிட்டார் ஜெ., அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மனிதருக்கு மூச்சு முட்டிவிட்டது. 
இந்நிலையில் ஜெ., மறைவுக்குப் பின் அந்த கட்சி சந்திக்காத சர்ச்சைகளில்லை, அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சிக்காத புகார்களுமில்லை. அந்த வகையில் கோயமுத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் இப்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். 

அவர், கோயமுத்தூர் மாநகராட்சியின் மத்திய மண்டலத்தின் மாஜி சேர்மன் இந்த ஆதி நாராயணன். இவர் மீதுதான் அம்மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் ‘பாலியல் புகார்’ ஒன்றை தந்திருக்கிறார் 33 வயது பெண் ஒருவர். தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடமிருந்த தங்க நகைகளை ஆதிநாராயணன் வாங்கிக் கொண்டார், தன்னை அவரது வீட்டுக்கு வரச்சொல்லி செக்ஸ் வைத்துக் கொண்டார்! என்று தெரிவித்துள்ள அந்தப் பெண், போலீஸிடம் புகார் கொடுத்தும் அவர்கள் அதை எடுத்துக் கொள்ளாததால் கலெக்டரிடம் புகார் கொடுத்ததாக கூறியுள்ளார். 

மேலும் “மாநகராட்சியில் வேலை வாங்கி தருகிறேன் என்று எனக்கு வாக்கு கொடுத்து அவரோட வீட்டுக்கும், பாலசுந்தரம் ரோட்டுல உள்ள லாட்ஜூக்கும் பல முறை வரச்சொல்லி என்னை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அவர் மேலே சட்ட நடவடிக்கை எடுத்தே தீரணும்.” என்று பொங்கியிருக்கிறார். 

இதற்கு பதில் சொல்லியிருக்கும் ஆதிநாரயணனோ “எனக்கு அந்த பெண்ணை தெரியும், ஆனால் அவர் சொல்வதெல்லாம் பொய். என் மீதான அரசியல் பழிவாங்கலுக்கு அந்தப் பெண் பயன்படுத்தப்படுகிறார். எதிர்வரும் தேர்தல்களில் நான் சீட் வாங்கிட கூடாது அப்படிங்கிறதுக்காக, என் பெயரை கெடுக்குறதுக்காகவே இந்த வேலையை சில பேர் செய்றாங்க. அவங்களோட தூண்டுதலால்தான் இந்த அசிங்கமான பொய்க்குற்றச்சாட்டு என் மேலே சுமத்தப்படுது. நானும் அந்த பெண் மீது புகார் கொடுப்பேன்.” என்று ஆதங்கம் காட்டியுள்ளார். 

அம்மா இல்லாத அ.தி.மு.க. இன்னும் என்னென்ன சர்ச்சைகளையெல்லாம் சந்திக்கணுமோ! கெரகம்!