ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகக் கருதி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- இராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு பரிந்துரை செய்த கோப்பை ஆளுநர் இதுவரை நிராகரிக்கவில்லை என்பதால் அவர் அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டதாகக் கருதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

 

அதனடிப்படையில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. அந்தப்  பரிந்துரையை நிராகரிக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார். இதுகுறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வெளிப்படையாகவே தனது அதிருப்தியைத் தெரிவித்து இருக்கிறது. மாநில அரசின் பரிந்துரையை ஏற்கவோ நிராகரிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் எந்த முடிவும் சொல்லாமல்  நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது’ என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலான பொறுப்பில் உள்ளவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகத்தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டியவற்றுக்கு காலஅவகாசம் நிர்ணயிக்கப் படவில்லை என்பதையும் உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 

7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்த தீர்மானத்தைத் தமிழக ஆளுநர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிராகரிக்கவில்லை. அந்த கோப்பை திருப்பியும் அனுப்பவில்லை. எனவே, அதை அவர் ஏற்றுக் கொண்டார் என முடிவு செய்து தமிழக அரசு அந்த ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என நீதிமன்றங்களே தெரிவித்துவிட்ட நிலையில் இதற்குமேலும் அவர்களை சிறையில் வைத்திருப்பது நீதி ஆகாது.  அதைத்தான் உயர்நீதிமன்ற நீதிபதியும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே,இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.