மாநில அரசு நிறைவேற்றும் சட்ட மசோதக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் மசோதா தாக்கல் செய்துள்ளார். 

மாநில அரசு நிறைவேற்றும் சட்ட மசோதக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் மசோதா தாக்கல் செய்துள்ளார். மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் கால தாமதம் செய்வது ஒரு குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது. அண்மையில் நீட் விவகாரத்தில் ஆளுநர் மசோதா மீது முடிவு எடுக்காமல் அதனை திருப்பி அனுப்பி பின்னர் மீண்டும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி.,வில்சன் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் முடிவெடுத்து ஒப்புதல் வழங்குவதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினார். குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் இதுபோன்ற சட்டத்தை நிலுவையில் வைக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளுநரின் இத்தகைய செயல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கை என்று தெரிவித்த அவர், தற்போதைய அரசியலமைப்பு பிரிவுகளின்படி சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கு தற்போது எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இதனால் தான் நீட் போன்ற முக்கிய மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், இதுபோன்ற செயல்களால் மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் செயல் வடிவம் பெறாமல் போவதாக தெரிவித்தார். ஆகையால் இதனை குறைக்கும் விதமாக, சட்ட முன்வரைவு குறித்து முடிவெடுக்க ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி.வில்சன் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். அந்த தனிநபர் மசோதாவில், ஆளுநர் அவராகவே முடிவெடுக்கும் சட்ட மசோதாக்கள் மீது 2 மாதத்திலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய மசோதா மீது ஒரு மாதத்திலும் முடிவெடுக்கும் விதமாக கால நிர்ணயம் செய்து, சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்தினார்.