சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு கொண்டு வர முடியாவிட்டால் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை ஈடுகட்ட சேவை வரியை 3 சதவீதம் உயர்த்தி 18 சதவீதமாக அதிகரிக்க  மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

கருத்துஒற்றுமை இல்லை

நாடுமுழுவதும் ஒரேமாதிரியான மறைமுகவரியான ஜி.எஸ்.டி. வரியை 2017-18ம் நிதியாண்டு தொடக்கம் ஏப்ரல் முதல்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக  பரிசீலித்து வருகிறது.  ஆனால், மாநிலங்களுக்கும், மத்தியஅரசுக்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக பலகருத்து மோதல் நிலவுகின்றன.

நம்பிக்கை

ஒருவேளை ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஜ.எஸ்.டி வரியை நடைமுறைக்கு கொண்டு வர முடியாவிட்டால் ஜூன் முதல் தேதியிலிருந்து அல்லது செப்டம்பர் முதல் தேதியிலிருந்து  கொண்டு வரலாம் என்று அரசு நம்பிக்கையுடன் உள்ளது.

இம்மாத இறுதி

ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி.யை கொண்டு வர முடியாவிட்டால் அரசின் வருமானத்தை உயர்த்த மாற்றுத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அந்த மாற்றுத் திட்டங்களில் ஒன்றுதான் சேவை வரியை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்துதல் ஆகும். இப்போது சேவை வரி 15 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை 18 சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருவதால், இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்பட்டு விடும் என மத்தியஅரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

பிப்ரவரி முதல் தேதியன்று தாக்கல் செய்யப்படும் மத்திய வரவு செலவு திட்டத்தில் சேவை வரி உயர்வு குறித்து அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தீவிர ஆலோசனை

இது குறித்து நிதி அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வரும் ஏப்ரல் மாதத்தில்இருந்து ஜி.எஸ்.டி.வரி நடைமுறைப்படுத்தாவிட்டால், சரக்கு மற்றும் சேவைவரி 15 சதவீதத்தில் இருந்து 18சதவீதமாக உயர்த்தப்படலாம். இந்த வரி உயர்வு அரசின் வருவாயை உயர்த்தி, ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்க வேண்டிய வருவாயை ஈடு செய்யும். இது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

16-ந்தேதி கூட்டம்

நேரடி வரிகள், மறைமுக வரிகளில் எந்த மாற்றமும் செய்ய அரசு விரும்பவில்லை. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ரத்துச் செய்யப்பட்டதால், பொதுமக்கள் பணப் பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்படும் நிலையில் நேரடி, மறைமுக வரிகளில் கைவைக்க அரசு விரும்பவில்லை. ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம். ஜனவரி 16ம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கும்பொழுது ஜி.எஸ்.டி. துவக்கப்படும் தேதி குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.