ஆளும் அதிமுக தரப்பு மற்றும் தினகரன் தரப்புக்கு இடையேயான மோதல் முற்றிவருகிறது.

அதிமுக என்ற கட்சியின் பெயரும் இரட்டை இலை சின்னமும் பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கே என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தினகரன் அணி, அதிமுகவின் பெயரையோ கட்சியின் சின்னத்தையோ பயன்படுத்த கூடாது எனவும் தெரிவித்தது.

ஆனால், தினகரனின் ஆதரவாளர்களும் அதிமுகவின் கரைவேட்டியை கட்டுகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன், அதிமுகவின் கரை வேட்டியை கட்டுவதற்கு அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. வேறு யாரும் கட்டக்கூடாது. ஆனால் தினகரன் ஆதரவாளர்கள், அதிமுக கரைவேட்டியை கட்டிக்கொண்டு உலா வருகின்றனர். 

அதிமுக கரைவேட்டியை கட்டும் தினகரன் ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் யாரேனும் கரை வேட்டி கட்டியிருப்பதை நமது தொண்டர்கள் பார்த்தால், வேட்டியை உருவிடுங்க.. நான் பார்த்துக்கொள்கிறேன் என சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளார்.

அமைச்சர் மணிகண்டனின் பேச்சு, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள தினகரன், இதுவரை அமைச்சர்களை கோமாளிகள் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைத்து 6 மாதங்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

இருதரப்புக்கும் இடையேயான வார்த்தைப்போர் முற்றிவருகிறது.