சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக  தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட, அமமுக செயலருமான, செந்தில் பாலாஜி, திமுகவில்  இணைந்தார்.

இணைப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய  செந்தில் பாலாஜி , ஸ்டாலின் மீதான ஈர்ப்பில், அடிப்படை உறுப்பினராக, திமுகவில், தன்னை இணைத்துக் கொண்டதாகவும், தொண்டர்களை அரவணைத்து செல்லக் கூடிய தலைவராக, ஸ்டாலின் இருக்கிறார் என்றும் புகழ்ந்தார்..

திமுகவுக்குத் தாவிய, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கரூர் அதிமுக சார்பில், வழியனுப்பு ஊர்வலம் நடந்தது. அதில், பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிய, அதிமுகவினர், குக்கரை போட்டு உடைத்தனர். ஐந்தாவது முறையாக, கட்சி மாறுபவருக்கு வழியனுப்பு விழா… தொடரட்டும் உங்கள் கட்சித் தாவல்…  எட்டட்டும் கின்னஸ் சாதனை… ' என, எழுதப்பட்டிருந்த அட்டைகளை அவர்கள் ஊடாவலத்தில் கொண்டு சென்றனர்.

ஆனால் அமமுக மூத்த நிர்வாகிகள் பலர், தன்னுடன், திமுகவுக்கு வராமல் புறக்கணித்ததால், செந்தில் பாலாஜி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தினகரன், அமமுகவைத் தொடங்கியபோது, செந்தில் பாலாஜியுடன், ஏராளமான, அதிமுக நிர்வாகிகளும், அக்கட்சியில் இணைந்தனர். ஆனால், நேற்று அவர் திமுகவில் இணைந்தபோது, சிலர் மட்டுமே சென்றுள்ளனர்.

அமமுக சார்பில், மண்டல வாரியாக நடந்த பொதுக்கூட்டம், மாவட்ட வாரியாக நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என  செந்தில் பாலாஜி, கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளார்.

காலியாக உள்ள, 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், 10 தொகுதிகளுக்கான, தேர்தல் செலவை ஏற்கும்படி, செந்தில்பாலாஜிக்கு, தினகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தினகரனுக்காகவும், கட்சிக்காகவும், செந்தில் பாலாஜ நிறைய செலவு செய்து நொந்து போயிருந்தவர், இதனால் கடும் அதிருப்தி அடைந்தாக கூறப்படுகிறது.


இதனிடையே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கவும், செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும், அமமுகவில் முக்கியத்துவம் தரப்படுவதாக, குற்றச்சாட்டு உள்ளது.

இதனால், அதிகம் பாதிக்கப்பட்டவர், செந்தில் பாலாஜி. எனவே, இனியும் தினகரனுடன் இணைந்து பணியாற்றினால், இருக்கிற சொத்துக்களையும் விற்று விட்டு, நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என, செந்தில் பாலாஜி நம்பினார்.

தொடர்ந்து, பணம் செலவு செய்ய, செந்தில்பாலாஜிக்கு அழுத்தம் கொடுத்தது தான், அவர் பிரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என விவரம் அறிந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.