பொதுவாக இதை யாரும் நம்பவே மாட்டார்கள் என்றாலும், இது உண்மை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதற்கான பல ஆதாரங்களை அவர்கள் எடுத்து விடுகின்றனர்.

அண்மையில் திருச்சியில் உள்ள நட்சத்திர  ஹோட்டலுக்கு வந்த அன்பில் மகேஷ் அங்கு ரூம் போட்டு தங்கியுள்ளார். அவர் வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான செந்தில் பாலாஜியும் அதே ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து காபி குடித்தவர், யாரிடமோ நீண்ட நேரம் போனிலும் பேசியிருக்கிறார். அதன் பிறகு அன்பில் மகேஷ் தங்கியிருந்த அறைக்குப் போய் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் பேசியிருக்கிறார்கள்.

இந்த சந்திப்புக்குப் பிறகு கரூரில் தினகரன் அணி சார்பாக நடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை. சென்னையில் நடந்த ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்துக்கும் அவர் வரவில்லை.

இதே போல் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக, நவம்பர் இறுதி வாரத்தில் கரூரில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் காலண்டருக்கு ஆர்டர் கொடுப்பார் செந்தில் பாலாஜி. இந்தமுறை ஆர்டர் கேட்டுப் போன பிரஸ் உரிமையாளரிடம், ‘இப்போ காலண்டர் வேண்டாம். நான் அப்புறம் சொல்றேன்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஜெயலலிதா நினைவு நாளில், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையிலும் செந்தில் பாலாஜியின் விளம்பரம் இல்லை. இப்படியாக அவரது செயல்பாடுகள் எல்லாமே கடந்த இரண்டு வாரங்களாகப் புதிராகவே இருக்கிறது.

செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுகவில் போட்டியிட்டவர், கரூர் சின்னசாமி. அவர்தான் இந்த நிகழ்வுகளுக்கான விடையைச் சொல்லியிருக்கிறார். கரூரில் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்கப் போன சின்னசாமியிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள்.

அப்போது அவர் செந்தில் பாலாஜிக்கு எதிராக இனி எதையும் செய்ய வேண்டாம்..’ என்று சொல்ல... அவருக்கு நெருக்கமான நண்பர்களோ ஆச்சரியத்துடன் கேட்டபோதுதான் விவரம் தெரிய வந்திருக்கிறது.

செந்தில் பாலாஜி இங்கே நம்ம கட்சிக்கு வர்றதுக்கு ஓகே சொல்லியிருக்காரு. மகேஷ் மூலமாக பேசியிருக்காங்க. அரவக்குறிச்சியில் நம்ம கட்சி சார்பாகவே அவருதான் நிற்கப் போறாரு. தலைமையில் இருந்தும் கூப்பிட்டு சொல்லிட்டாங்க. எனக்கு எம்.பிக்கு கொடுக்கிறதா சொல்லிட்டாங்க. எம்.பி. தேர்தலுக்கு இங்கே ஆகும் செலவை அவரு பார்க்கிறதா சொல்லிட்டாராம். சீக்கிரமே அவரு இங்கே வந்துடுவாரு. அதனால யாரும் அவரைப் பத்தி தப்பா வாய்விட்டுட வேண்டாம்...’ என்று சொல்ல... திமுகவினர் அதிர்ந்துவிட்டார்களாம். இந்த தகவல் கரூர் திமுக வட்டாரத்தில் தீயாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது.

மற்ற கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்களை இழுக்கும் வேலையில் தற்போது திமுக தீவிரமாக இறங்கியிருப்பது மற்றவர்களை ஆச்சரிய்த்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் முதலில் சிக்கியது அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி. தினகரன் அணியில் இருக்கும் இன்னும் சிலரையும் விரைவில் திமுக பக்கம் இழுக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கிறது