‘நம்மதான் ஜெயிக்கிறோம்..! நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம்..!’ தொண்டரை உசுப்பும் செந்தில் பாலாஜி பஞ்சுகள்..
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வாஷ் அவுட் ஆன மாவட்டம் கோயமுத்தூர். மொத்தமுள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் ஒன்பதில் அ.தி.மு.க.வும், மீதியுள்ள ஒன்றில் அதன் கூட்டணியான பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன. தமிழகத்தில் முரட்டு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்த தி.மு.க.வால் கோவையில் இப்படி கட்சி அடியோடு கவிழ்ந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.
அதனால் அமைச்சரவை அமைந்ததும், கோயமுத்தூர் மாவட்ட பொறுப்பாளர்களாக அமைச்சர் சக்கரபாணி மற்றும் இளித்துரை ராமச்சந்திரன் ஆகியோரை நியமித்தார் முதல்வர். இதில் சக்கரபாணி சுறுசுறு மனிதராக நடந்தார். ஆனால் அவருக்கே தெரியாமல் அவரது சொந்த மாவட்டமான திண்டுக்கல்லை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பலர், கோயமுத்தூருக்கு சென்று செம்ம வசூலில் குதித்தனர். புகார் முதல்வருக்கு போக செம்ம டென்ஷனாகிவிட்டார். அடுத்து இன்னொரு அமைச்சரான ராமச்சந்திரனோ செயல்படவே இல்லை! என புகார். இதனால் இவர்கள் இருவரையும் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று செந்தில்பாலாஜி எந்த களத்திலும் இறங்கி அடிப்பவர், அதிரடி அரசியல்வாதி. இப்படியொரு நபர்தான் கோயமுத்தூர் மாவட்ட அ.தி.மு.க.வை எதிர்த்து செயல்பட சரியான ஆள் என நினைத்தார். மற்றொன்று, கோயமுத்தூர் மாவட்டத்தின் ஆதிக்க சமுதாயமான ‘கவுண்டர்’ சமுதாயத்தை சேர்ந்தவர் செந்தில்பாலாஜி, எனவே எளிதாக நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியுமென்பதும் கணக்கு.
செந்தில்பாலாஜியும் பொறுப்பு அமைச்சராக கோயமுத்தூருக்கு சென்றார், கையில் பொறுப்பை எடுத்தார். அதிகபட்சம் ஒரேயொரு வாரம்தான் ஒட்டுமொத்த மாவட்ட தி.மு.க.வையும் தலைகீழாக மாற்றினார். பொதுவாக அந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பகல் பத்து மணி கூட்டத்திற்கு பதினோறு மணிக்கெல்லாம் வந்து நிற்குமளவுக்கு சுறுசுறுப்பானவர்கள். ஆனால் அமைச்சரோ, காலை ஏழு மணிக்கு செயல்வீரர் கூட்டங்களை வைத்தார். பல்லை தேய்ச்சுட்டு காரை எடுத்துட்டு கிளம்பி வந்தாங்கன்னா கூட்டத்தில் வைத்துதான் காஃபியே குடிப்பார்கள். அந்தளவுக்கு பெண்டு நிமிர்த்த துவங்கினார் கட்சி நிர்வாகிகளை.
கட்சி எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? நான் நிம்மதியா வளர்ந்தால் போதும்! என்று இருந்த நிர்வாகிகளை வியர்க்க விறுவிறுக்க உழைக்க வைத்தார். மாநகராட்சி முழுக்கவும், மாவட்டம் முழுக்கவும் மக்கள் சபை கூட்டங்களை நடத்தி மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அதை ரகம் வாரியாக பிரித்து, ஆட்சியரிடம் கொடுத்து, உடனடியாக தீர்வுகளை உருவாக்க வைத்தார்.

முதல்வர் தலைமையில் ஒரு பிரம்மாண்ட நலத்திட்ட விழாவை நடத்தினார். ஜல்லிக்கட்டு நடத்த வைத்தார். இப்படி அதிரடிகளை செய்து வைத்தார் செந்தில் பாலாஜி. இதெல்லாம் ஏன்? என்றால், இதோ உள்ளாட்சி தேர்தலில் கோயமுத்தூர் மாநகராட்சியை மட்டுமில்லாமல் அம்மாவட்டத்தில் உள்ள ஏழு நகராட்சிகளையும், அத்தனை பேரூராட்சிகளையும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றே தீரவேண்டும்! என்பதே அவரது இலக்கு.
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ‘நம்மதான் ஜெயிக்கிறோம்! நம்ம மட்டும்தான் ஜெயிக்கிறோம்’ என்று கோவை மாவட்ட தி.மு.க.வினரை வகையாக உசுப்பிவிட்டு, தேர்தல் வேலை பார்க்க வைக்குமளவுக்கு பஞ்ச் டயலாக் பேசி வருகிறார் கூட்டங்கள் தோறும். தி.மு.க.வினரும் டபுள் விசலடித்தபடி தேர்தல் பணிகளை துவக்கியுள்ளனர்.
ஆனால் அதேவேளையில் அ.தி.மு.க.வில் செந்தில்பாலாஜி இருந்தபோது அவருக்கு நெருங்கிய சகோதரராக இருந்தவர் கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மாஜி அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி. ஒட்டுமொத்த கோவையும் இவர் கையில்தான் உள்ளது. இவரோ கரூரில் இருந்து கோவைக்கு வந்த செந்தில்பாலாஜியிடம் தனது கட்சியும், தன் ஆளுமையும் தோற்றுப் போய்விட கூடாது! என்பதில் துடிப்பாய் இருக்கிறார். அதனால் செந்திலின் பிளான்களை பஞ்சராக்கும் விதமாக ஸ்கெட்ச் போடுகிறார்.
கொங்கு தலைநகரான கோயமுத்தூரில் ஜெயிக்கப்போவது யார் செந்திலா அல்லது வேலுவா? யுத்தம் ஸ்டார்ட்ஸ்!
