முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போல, தங்கமணிக்கு பிடி இறுகும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய நேற்று 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். கடந்த 15ஆம் தேதி 69 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.16 கோடி பணம் , 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள் ,சேலத்தில் ஓரிடத்தில் என சோதனை நடைபெற்றது.

15 ஆம் தேதி நடைபெற்ற சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, ‘கிரிப்டோகரன்சியில் நான் முதலீடு செய்திருப்பதாக எஃப்.ஐ.ஆரில் யூகத்தின் அடிப்படையில் என்று சொல்லியிருக்கிறார்கள். கிரிப்டோகரன்சியினுடைய விளக்கமே எனக்குத் தெரியாது. அதில் எப்படி முதலீடு செய்வது என்றே எனக்குத் தெரியாது. இதுபோல் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. பழிவாங்கும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த சோதனைக்கு முழு காரணம் செந்தில் பாலாஜிதான். செந்தில் பாலாஜியை பொறுத்தவரை என்னை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் செய்கின்றார். 

ஆயிரம் செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சட்டத்தின் மீது, ஆண்டவனின் மீது, நீதி மீது நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன்’ என்று வெளிப்படையாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடும் குற்றசாட்டை வைத்தார் தங்கமணி.

அடுத்த நாளே இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கான காரணம் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒன்றைக் கூறுகிறார். அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், வேறு ஒரு விஷயத்தை கூறுகின்றனர்.இதில் எது உண்மை என்பது குறித்து, முதலில் அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும். 

பின், என் மீது குற்றம் சொல்லட்டும். இந்தியாவிலேயே ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி தங்கமணி தான்’ என்று அசால்ட்டாக பதில் சொன்னார்.இதுவரை நடைபெற்ற சோதனைகளில் மற்ற முன்னாள் அமைச்சர்களை விட, தங்கமணிக்கு தான் அதிக பிரஷர் கொடுத்து சோதனை செய்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் பேசினோம்.’ அதிமுகவில் செந்தில் பாலாஜிக்கு பதவி பறி போன பிறகு தங்கமணியை கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஜெயலலிதா அறிவித்தார். அப்போது வரை நண்பராக இருந்த தங்கமணி பொறுப்பாளர் ஆன பிறகு எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதரவாக செயல்பட தொடங்கி விட்டார். அப்போதிருந்து செந்தில் பாலாஜிக்கும் தங்கமணிக்கும் பனிப்போர் ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. எம்.ஆர். விஜயபாஸ்கரை செந்தில் பாலாஜியை விட பெரிய ஆளாக மாற்றி, செந்தில் பாலாஜியை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வந்தார் தங்கமணி. 

செந்தில் பாலாஜியும் அமமுக சென்றார். அங்கு எதுவும் சரிவராததால், திமுக சென்று தன்னுடைய வெற்றிக்கணக்கை தொடங்கினார். செந்தில் பாலாஜியால் ஒரு தொகுதி கூட கரூரில் கைப்பற்ற முடியாது என்று பிரச்சாரம் செய்தார் தங்கமணி. அதையெல்லாம் பொய்யாக்கி 4 தொகுதிகளிலும், அசால்டாக வெற்றி பெற்று, திமுகவின் ‘கொங்கு’ முகமாக மாறினார் செந்தில் பாலாஜி. அதற்கு கைமாறாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தங்கமணி வைத்திருந்த மிகப்பெரிய இரண்டு துறைகளையும் ஸ்டாலின் தந்தார். இது தங்கமணிக்கு பெரிதும் எரிச்சலூட்டியது.

செந்தில் பாலாஜியிடம், தனது குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை கொடுக்க தங்கமணி சென்றுள்ளார். அப்போது அவரை பல மணி நேரம் காக்க வைத்து விட்டார் செந்தில் பாலாஜி. சீனியரான தன்னை செந்தில் பாலாஜி காக்க வைத்த கோபம் பெருந்தீயாக தங்கமணியின் மனதில் பற்றி கொண்டது. தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு தம்பிதுரை மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கை வைத்து அவரை ஓரங்கட்டினார் தங்கமணி என்றும் சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜியின் தீராத பகை, இன்றும் இருப்பதால் தான், கொங்கு மண்டலத்தில் இருக்கும் முக்கிய நபர்களான வேலுமணி, தங்கமணி ஆகியோரை கவிழ்க்க வேண்டும் என்பதுதான் முதல் திட்டம் அதன்படி தான் இது நடந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த கால ஆட்சிக்காலத்தில் நிலக்கரி மற்றும் டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகளை லிஸ்ட் எடுத்து முதல்வரிடம் சில மாதங்களுக்கு முன்பே வழங்கிவிட்டார் செந்தில் பாலாஜி.தற்போது நடந்து இருக்கும் ரெய்டு கூட, அந்த ஆவணங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடந்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனவே விரைவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போல, தங்கமணிக்கு பிடி இறுகும் என்று எதிர்பார்க்கலாம்.இது செந்தில்பாலாஜியின் பழைய கணக்கை தீர்க்கும் நேரமும் இதுதான்’ என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.