அதிமுக முன்னாள் அமைச்சரும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தினகரனின் தலைமையை ஏற்று அவருடன் அமமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தவருமான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 
\
ஜெயலலிதா தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தினகரனின் தலைமையை ஏற்று செயல்பட்டுவந்தார். கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜி திமுகவில் இணைய போகிறார் என்ற தகவல் பரவிவந்த நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவில் இணைந்ததற்கான காரணத்தை தெரிவித்தார். 

திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, தமிழகத்தின் உரிமைகளை ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து தாரைவார்த்துவிட்டது. அதிமுக அரசு தாரைவார்த்த தமிழகத்தின் உரிமையை மீட்க திமுக தலைவர் ஸ்டாலின் போராடுகிறார். தொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவர். ஸ்டாலினின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தின் உரிமையை மீட்கும் தலைவரின் கீழ் செயல்படுவதற்காக திமுகவில் இணைந்துள்ளேன். 

தமிழக மக்கள் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள். கரூர் மாவட்ட மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக திமுகவில் இணைந்துள்ளேன். நாடாளுமன்ற தேர்தலோ அல்லது சட்டமன்ற தேர்தலோ எதுவாக இருந்தாலும் திமுக வெற்றி பெறுவதற்கு என்னுடைய முழு உழைப்பை கொடுப்பேன் என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.