Senthil Balaji plays a drama for politics - MR Vijayapaskar
அரசியலுக்காக கபட நாடகம் போடுகிறார் செந்தில் பாலாஜி என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கரூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அடுத்த ஆண்டே அதற்கான அரசாணையும் வெளியிட்டதுடன் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக 229 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.
2016 ஆண்டில் அடிக்கல் நாட்டி அதன்பிறகு அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
முன்னதாக குப்புச்சிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்வு செய்த இடத்திற்கு பதிலாக காந்தி கிராமம் அருகில் அரசுக்கு சொந்தமாக உள்ள 20 ஏக்கர் புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும் செந்தில் பாலாஜிக்கும் கடந்த 2 ஆண்டுகளாகவே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதைதொடர்ந்து குப்புச்சிபாளையத்திலேயே மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும் என்று செந்தில் பாலாஜி வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் தம்பிதுரையும் எம்.ஆர். விஜயபாஸ்கரும் மறுப்பு தெரிவித்து வருவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் கண்டித்து வரும் 24ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நகர காவல் நிலையத்தில் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.
இந்நிலையில், கரூரில் புதிய மருத்துவகல்லூரி கட்டுவது குறித்து போக்குவரத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
ஜெயலலிதா இருந்தபோது மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான இடம் மாற்றப்பட்டது.
ஜெயலலிதா உத்தரவிட்டது செந்தில் பாலாஜிக்கு தெரியும்
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு அதற்கேற்ப மருத்துவ கல்லூரி கட்டப்படும்.
அரசியல் ஆதாயத்திற்காகவே செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
