மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியதை அடுத்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, ஏ.சி உள்ளிட்டவைகளை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக மிந்தேவை அதிகரித்துள்ளது. மின்தேவை அதிகரித்துள்ள நிலையில் போதுமான மின்சாரம் தயாரிக்க நிலக்கரி இல்லை என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தமிழகத்திற்கான நிலக்கரியை வழங்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய 296 மெகா வாட் மின்சாரம் தற்போது வரை கிடைக்கவில்லை. மின் பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகா வாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4.80 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். டன் 137 டாலர் என்ற விலையுடன் ஜி.எஸ்.டி. சேர்த்து 143 டாலர் என்ற விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 68 முறை இதேபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொந்த மின் உற்பத்தியை 31 விழுக்காடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்தடை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மத்திய அரசு குறைந்தளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த 2 மாதத்துக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் 5 சதவீதம் கூட மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். அப்போது தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மின்தடை தொடர்பாக அமைச்சர் கூறிய விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.