செந்தில் பாலாஜி பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், “கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை“ என்று சொல்வார்கள் என பிரமித்துப்போனார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கரூர், குப்பிச்சிபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘’இன்று காலை வரை, நான் பல்வேறு மாவட்டத்திற்குச் சென்றிருந்தாலும், இந்தக் கரூர் மாவட்டத்திற்கு வந்திருக்கும் போது, எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இதுவரைக்கும் நான் பார்த்திருக்கக் கூடிய கிராமசபைக் கூட்டத்தை எல்லாம் விஞ்சக் கூடிய அளவிற்கு இப்பொழுது நடந்து கொண்டிருக்கக் கூடிய, இந்த மக்கள் கிராமசபைக் கூட்டம் மிக எழுச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

இதனை மிகச் சிறப்பான வகையில் நம்முடைய மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் கட்சியில் வந்து சேர்ந்த பொழுது எந்த உணர்வோடு சேர்ந்தாரோ? நான் எந்த உணர்வோடு அவரை இந்தக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேனோ, அதைவிடப் பல மடங்கு அவர் இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், “கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை“ என்று சொல்வார்கள். அதைப்போல, அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிற உங்களிடத்தில், அவரைப்பற்றி அறிந்து வைத்திருக்கக்கூடிய உங்களிடத்தில் அவரைப் பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நான் இப்பொழுது இங்கு வருகிற வழியில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து இங்கு பதினைந்து நிமிடங்களில் வந்து விடலாம். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக அந்த வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது. இந்தப் பெரும் கூட்டத்தை கிராமசபைக் கூட்டம் என்று மட்டும் சொல்ல முடியாது’’ என அவர் செந்தில் பாலாஜியை பெற்றியெ மெருமைகளை அடுக்கினார்.