புதுக்கட்சி தொடங்குகிறார் செந்தில் பாலாஜி !!! தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது கடும் தாக்கு…
கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரும் முட்டுக்கட்டை போடுவதாக செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.
இதனை வலியுறுத்தி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரும் 28 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செய்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி, தம்பிதுரை மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோரிடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
அம்மாவட்டத்தில் யார் பெரிய ஆள் என்பது குறித்து இந்த மூவரிடையே ஜெயலலிதா இருந்த போதே கடும் போட்டி நிலவியது. தற்போது ஜெ.மறைந்ததை அடுத்து இந்த பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஏற்கனவே தனக்கு கிடைக்க வேண்டிய போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை தட்டிச் சென்றுவிட்டார் என்று விஜய பாஸ்கர் மீது கடுப்பில் இருந்த செந்தில் பாலாஜி அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்.
தற்போது அவர் மருத்துவக் கல்லூரி பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். ஜெ உயிருடன் இருந்தபோது கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் மருத்து கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் மருத்துவ கல்லூரி கட்ட தம்பிதுரையும், விஜயபாஸ்கரும் முட்டுக் கட்டை போடுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் வரும் 28 ஆம் தேதி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினரை எதிர்த்து ஆளும் கட்சி எம்எல்ஏவே உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.