பொன்முடி வீட்டில் குவிந்த அமைச்சர்கள்..! தைரியம் சொன்ன ஸ்டாலின்... அடுத்தகட்ட சட்ட போராட்டம் என்ன.?அவசர ஆலோசனை
பொன்முடியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை இன்று அதிகாலை விடுவித்தது. இதனையடுத்து பொன்முடி வீட்டிற்கு வந்த மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ஐ பெரியசாமி அமலாக்கத்துறை விசாரணை விவரங்களை கேட்டறிந்தனர்.
அமலாக்கத்துறை- பொன்முடியிடம் விசாரணை
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நேற்று காலை திடீரென விசாரணை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, விழுப்புரம் பகுதியில் உள்ள 9 இடங்களில் விசாரணையை நடத்தியது. கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியின், கனிமவள அமைச்சராக இருந்த பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் விதிமுறைகளுக்கு மாறாக தனது மகனுக்கே குவாரி ஒப்பந்தம் வழங்கியதாகவும்,
குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும் இதன் காரணமாக அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. நேற்று இரவு 9 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடி அழைத்து செல்லப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்றது.
பொன்முடியுடன் பேசிய ஸ்டாலின்
பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் போது ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல ரூ.41.9 கோடி வைப்புத் தொகை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.பொன்முடியிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து பொன்முடி இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டார். மீண்டும் இன்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொன்முடியை தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அமலாக்கத்துறை நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்து, துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அமைச்சர் பொன்முடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
பொன்முடி வீட்டிற்கு வந்த அமைச்சர்கள்
இந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு திமுக சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக கேட்டறிந்தனர். மேலும் இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை பொன்முடியை ஆஜராக கோரி சம்மன் அளித்துள்ள நிலையில் சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்ட வல்லுநர்களோடு முக்கிய ஆலோசனை மேற்கொண்டர்.
இதையும் படியுங்கள்
டெண்டர் முறைகேடு வழக்கு.. ஆர்.எஸ். பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்.. குஷியில் இபிஎஸ்