தினகரனுக்கு தூது அனுப்பிய சீனியர் அமைச்சர்..!

இதோ இன்னும் ஐந்தே நாட்களில் முடியப்போகிறது 2018, புது வருடம் பிறந்த நொடியிலேயே நாடாளுமன்ற தேர்தலுக்கான வைபரேஷன் தன்னிச்சையாக உருவாகிவிடும். அத்தனை கட்சிகளும் ஆளாய் பறக்க துவங்கிவிடுவார்கள் தேர்தலை நோக்கி. 

இந்த சூழ்நிலையில் தினகரன் கட்சிதான் கூட்டணிக்கு வழியில்லாதது போலவும், தர்மசங்கடத்திலும், நெருக்கடியிலும் நெளிவது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் யதார்த்த நிலை என்னவென்றால், ஆளும் கட்சிதான் மிக கடுமையான நெருக்கடியில் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

டோட்டலாக அமைச்சரவை மீது மக்களுக்கு இருக்கும் எரிச்சல், பன்னீர் தம்பி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களினால் ஏற்பட்டிருக்கும் பொதுவான அவப்பெயர், தமிழகத்தை அலட்சியம் செய்யும் மத்திய அரசை தட்டிக் கேட்க துணிச்சலின்றி இருப்பதால் சேர்ந்திருக்கும் எதிர்ப்பு, இயல்பாகவே ஆளுங்கட்சி மீது மக்களுக்கு வரும் சலிப்பு, இதையெல்லாம் தாண்டி ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. மீதான ஈர்ப்பு குறைவு ஆகியன எல்லாமே இணைந்து அக்கட்சியை பெரும் சிக்கலுக்குள் பொதிந்திருக்கிறது என்கிறார்கள்.


 
’கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளையே காணோம்!’ என்று ஒரு காலத்தில் இறுமாய்ப்பாய் சொன்னார் ஜெயலலிதா. அதே அ.தி.மு.க.வுக்கு இப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கூட்டணி நண்பர்களே இல்லை. பி.ஜே.பி.யுடன் மட்டுமே கைகோர்க்க வாய்ப்புள்ளது. அப்போதும் அந்த கட்சி இவர்களை பல படிகள் கீழே வைத்து டாமினேட்தான் செய்யுமே தவிர, உரிய மரியாதை கொடுத்து நடத்தாது. மேலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் அருமையாக உழைத்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கும்  தொகுதிகளாக பார்த்து தான் போட்டியிட திட்டமிட்டுள்ளது பி.ஜே.பி. இதுவும் அ.தி.மு.க.வுக்கு பெரிய சறுக்கல்தான். 

இந்த நிலையில்தான் அன் - அபீஸியலாக தங்களுக்குள் ஒரு மீட்டிங் போட்ட அமைச்சர்கள் சிலர் பல சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்தனர். அதன்படி ‘தினகரனுக்கென்று பெரிய மக்கள் செல்வாக்கும், அ.தி.மு.க. தொண்டர்கள் செல்வாக்கும் இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அவரை விலக்கி வைப்பதால் நமக்குதான் நஷ்டம். அ.தி.மு.க.வுக்கு வரவேண்டிய வாக்குகள்தான் தினகரனுக்கு போகுமே தவிர, தினகரனுக்காக இருக்கும் வாக்கு வங்கியில் ஒரு ஓட்டு கூட நம் பக்கம் வராது. அதனால் அவரை நம் பக்கம் இழுப்பது நடந்தே ஆகவேண்டும்.’ என்று அதில் ஒரு முடிவை எட்டினார்களாம். 

இதைத் தொடர்ந்து சீனியர் அமைச்சர் ஒருவர், தினகரனிடம் பேசிப்பார்க்கும் அஸைன்மெண்டை கையில் எடுத்திருக்கிறார். அவர் தன் உதவியாளர் ஒருவரை தினகரனிடம் அனுப்பி ‘பிரிந்து நிற்பதால் இரண்டு தரப்புக்கும்தான் இழப்பு.  அ.தி.மு.க.வும் ஜெயிக்காது, அ.ம.மு.க.வும் ஜெயிக்காது. அதனால் அம்மாவின் கட்சி ஜெயிக்க வேண்டுமென்றால் தேர்தலில் ஒன்றாய் நின்று போட்டியிடுவோம். இணைப்பை பற்றி பிறகு பேசிக்கலாம், சின்னம்மாவையும் உங்களையும் கட்சிக்குள் சேர்ப்பது பற்றியும் தேர்தலுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் பேசி முடிவு செய்யட்டும். இப்போதைக்கு தேர்தலை வெற்றிகரமாக முடிப்போம்.’ தகவலை பரிமாறி இருக்கிறார். 

இதைக்கேட்டு டென்ஷனான தினகரன், ‘தோல்வியை பத்தி எங்களுக்கு எந்த கவலையுமில்லை. ஆரம்பிச்சு ஒரு வருஷம் கூட ஆகாத கட்சி தோற்பதில் அவமானமுமில்லை. ஆனா துரோக கூட்டமான நீங்க தோற்கணும், அது நடந்தால் உங்களோட அரசியல் எதிர்காலம் முடிஞ்சுது. 

எப்டி எப்டி, தேர்தலுக்கு நான் வேணும், இதுக்காக என் கிட்ட கெஞ்சுறீங்க. ஆனா என்னை கட்சியில சேர்க்கிறதை பத்தி பிறகு யோசிப்பாங்களா உங்க ஒருங்கிணைப்பாளருங்க! எத்தனை வாட்டி எங்களுக்கு அல்வா கொடுப்பீங்க? நான் கூட்டு வெச்சால், அந்த  அலையில ஜெயிச்சுட்டு, ரிசல்ட் வந்த மறு நிமிஷமே என்னை கழட்டிவிடுற கூட்டம் நீங்க. இதுக்கும் மேலே இப்படியொரு எண்ணத்தை வெச்சுக்கிட்டு என்னை நெருங்கினா வேற மாதிரி ஆகிடும்.” என்று முரட்டு ரியாக்‌ஷன் காட்டிவிட்டாராம். 

சீனியர் அமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த பலனை கேள்விப்பட்ட கொங்கு தொகுதி அமைச்சர் ‘இப்படியொரு மொக்க ஐடியாவை அந்தாள்ட்ட போயி எந்த நம்பிக்கையில சொன்னீங்ணா?’ என்று கேட்டாராம் நக்கலாக.