திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து நீடிப்பது சந்தேகம்தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு: நேற்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்திற்கு ஏற்கனவே வரவேண்டிய ரூபாய் 12 ஆயிரம் கோடியில் நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் நிதி தன்னாட்சி பாதிக்கப்படாத வகையில் மீதமுள்ள தொகையை பெறுவதற்கு வலியுறுத்துவோம். 

விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டதை போல அதிமுகவிலும் விரைவில் குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மூலம் அறிவிக்கப்படும், மக்கள் செல்வாக்கை திமுக இழந்து கொண்டிருக்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகள் அங்கு நீடிப்பது என்பதே சந்தேகம்தான். திமுக பொதுச்செயலாளர் கூட்டணிக் கட்சிகளை எப்படி அணுகுகிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். நெல்லிக்கணி மூட்டை அவிழ்த்ததை போலத்தான் திமுக கூட்டணி. கிளைமாக்ஸில் மாற்றங்கள் இருக்கும், ஆனால் எங்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. 

அதிமுக மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சியாக உள்ளது, புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. திமுகவை யாரும் ஆட்டிப் பார்க்க வேண்டியதில்லை, ஏற்கனவே அது ஆட்டம் கண்டு தான் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தன்மான மிக்கவை, ஆனால் அவற்றை சீண்டிப் பார்க்கும் விதமாக கட்சியின் தலைவர்களுடைய பேச்சு உள்ளது என்றார். தமிழக முதல்வரின் தாயார் 93 வயதில் மறைந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். முதல்வருடன் பழகிய காலங்களில் அதை நான் உணர்ந்து இருக்கிறேன் என்றார்.