சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை போலீசார் கைது செய்துள்ளனர். 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் செல்வதற்கு கட்டாயப்படுத்திய வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவி கைது தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. நிர்மலா தேவி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்து நக்கீரன் இதழில் செய்திகள் வெளியானது. அந்த செய்தியில், ஆளுநரை தான் 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தி குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார், அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், சிந்தாதரிப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திப்பதற்காக மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று காலை சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது அவரை போலீசார் தடுத்து விட்டனர். அப்போது போலீசாருக்கும், வைகோவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்த சந்திக்கலாம் என்று போலீசார் கூறியதற்கு, தான், உடனே நக்கீரன் கோபாலை சந்திக்க வேண்டும்; நீதிமன்ற தீர்ப்பின்படியே தான் அனுமதி கேட்பதாகவும் வைகோ கூறினார்.

போலீஸ் நிலையத்தையும், நீதித் துறையையும் கலங்கப்படுத்திய பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜாவை, கவர்னர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்து வைக்கிறார் ஆளுநர். ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் நக்கீரன் கோபாலை சந்திப்பதற்கு, தான் வழக்கறிஞரான வந்துள்ளேன். ஒரு பத்திரிகை மிரட்டலாம் என்று இப்படி கைது செய்துள்ளனர். இந்த செயல் பத்திரகைகளையும், ஊடகங்களின் குரல் வளையை நெரிக்கும் செயலாக உள்ளது என்றார் வைகோ. தேசத்துரோக வழக்கு போடப்படுபவர் உண்மையான தேசபக்தர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று வைகோ கூறினார்.

 

வைகோ தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போலீஸ் நிலையத்துக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று தடுத்து வந்தனர். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பத்திரிகையாளர்கள் மற்றும் மதிமுக தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, கைது செய்யப்பட்டார்.  வைகோ கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டங்களால் சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே பெரும் பரபரப்பு நிலவுகிறது.