சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (89). வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை திடீரென மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஏற்கனவே தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உள்ளன. இதனால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வந்த போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி தா.பாண்டியன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த தா.பாண்டியன் 2 முறை மக்களவை உறுப்பினராகவும், 3 முறை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.