நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தொடருமா..? செங்கோட்டையன் கூறிய பரபரப்பு தகவல்
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போட்டியிடும் போது எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது மாபெரும் வெற்றியாக கருதுகிறோம் என முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் முத்துரமணன் தலைமையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ. செங்கோட்டையனிடம், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணையாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் வாக்கு இல்லாதவர்கள் கேள்விக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. புகழேந்தி தமிழ்நாட்டில் வாக்களிக்கின்ற உரிமை இல்லாதவர் அவர் கேள்விக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது என தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி.?
ஈரோடு தேர்தலில் நிற்கும்போது இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற குழப்பம் இருந்தது. நீதிமன்ற உத்தரவால் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது இதுவே மாபெரும் வெற்றியாக கருதுகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் எவ்வளவோ இடர்பாடுகளுக்கு இடையில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கூட்டணியை பொருத்தவரை தேர்தல் நெருக்கத்தில் முடிவு செய்ய வேண்டிய ஒரு முடிவு என தெரிவித்தவர். அதே நேரத்தில் அதிமுகவை பொறுத்தவரை கொள்கையில் தெளிவாக இருக்கின்றோம். சிறுபான்மையினரை காக்கின்ற இயக்கமாக அதிமுக உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு தேர்தல் தோல்விக்கு யார் காரணம்..? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தேதி குறித்த இபிஎஸ்