முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைய இருக்கும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் 50 வேன்கள் மற்றும் 100 கார்களில் கரூரிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக இருப்பது, 'செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணையப் போகிறார்' என்ற தகவல்தான். வெறும் வதந்தி என்ற தகவல் நாளை உண்மையாக இருக்கிறது. ஆமாம் திமுகவில் செட்டில் ஆக அனைத்தும் முடிந்துவிட்டது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதிமுக துணைப்பொது செயலாளராக இருந்த தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அப்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் செந்தில் பாலாஜி.

இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்று அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் என கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தார் தினகரன் . தினகரன் பெரிதாய் நம்பிக்கை வைத்தவர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர். ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். அதுமட்டுமல்ல, சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார். 

இப்படி இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள நேற்று இரவே சென்னை கிளம்பிவிட்டார். தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் சென்னைக்கு வந்துவிட்டனர். இதனையடுத்து இன்று காலை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 50 வேன்களிலும், 100 கார்களிலும் 2000 பேருக்கு மேல் சென்னைக்கு கிளம்பியிருக்கிறார்கள். ஏற்கனவே கார்களில் இருந்த ஜெயலலிதா சசிகலா போட்டோக்களை அகற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.