மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் நடிகர்கள் ரஜனிகாந்த்தும் , கமலஹாசனும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் அண்மையில் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர்கள் கமலஹாசனுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு அமைச்சரும் கமலஹாசனை கண்டபடி தாக்கிப் பேசி வருவதால் கமலஹாசனுக்கு தமிழக மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஓபிஎஸ்அணியில் இருந்து முதல் ஆளாக ஆறுக்குட்டி தங்கள் அணிக்கு வந்துள்ளதாக கூறினார். அடுத்தடுத்து ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் அனைவரும்  எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து விடுவார்கள் என தெரிவித்தார்.

தற்போது மக்கள் நடிகர்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று தெரிவித்த செல்லூர் ராஜு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் நடிகர்கள் ரஜனிகாந்த்தும் , கமலஹாசனும் அதிமுகவில் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கமலஹாசன் அதிமுகவில் இணைந்த பிறகு, தவறுகளை சுட்டிக்காட்டினால், அதை சரி செய்வோம் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.