ஓபிஎஸ் சுற்றுப்பயணம் ...? கோபமடைந்த செல்லூர் ராஜூ..! போங்கப்பா பேட்டியே வேணாம்...
ராகுலின் நடைபயணம் காங்கிரசுக்கு நல்லதாக அமையுமா என தெரியவில்லை ஆனால் ராகுலுக்கு நல்ல பெயரை தரும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு பொதுமக்கள் பாதிப்பு
மதுரை பைகாரா பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தமிழ்மணி அறக்கக்கட்டளை மூலம் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை தொடங்கி வைத்து தனது குடும்பத்தினருடன் அதனை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். வேறு தொழில் செய்யலாமா இல்லை தொழிலை விட்டுச் செல்லலாமா என்ற நிலைக்குச் சென்று உள்ளனர். மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம் ஏன் வைத்தனர். மக்கள் ஆதரிக்காத போதும் மின்கட்டண உயர்வு நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. பிறகு எதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள் என கேள்வி எழுப்பினார்.
சொல்லுவது ஒன்று.. செய்வது ஒன்று...! இது தான் திராவிட மாடலா..? ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்
இபிஎஸ் உழைப்பால் உயர்ந்தவர்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மீது மேலும் சுமையை இந்த அரசு ஏற்றி உள்ளது. மக்கள் மீது மாதம் மாதம் வரி சுமத்துவதுதான் திராவிட மாடலா?? கடந்த ஆண்டை விட நீட் தேர்வு தேர்ச்சியில் தமிழகம் பின் தங்கி உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதால் தேர்ச்சி விகிதம் குறைந்தது. நீட் தேர்வு வர முழு காரணம் திமுக தான் என குறிப்பிட்டார். திமுக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் உள்ள எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் குடும்பமும், அமைச்சர்கள் குடும்பமும் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளனர். இ.பி.எஸ் தற்காலிக பதவி என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு 4 1/2 ஆண்டு காலம் ஆட்சி செய்த முதல்வர் எடப்பாடியார். தற்போதைய முதல்வரின் தந்தை முன்னாள் முதல்வராக இருந்தவர், கட்சித் தலைவராக இருந்தவர், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உழைப்பால் வந்தவர், படிப்படியாக உழைத்து முதல்வரானவர், அப்பா பின் வந்தவர் இல்லையென கூறினார்.
பொய் வாக்குறுதி கொடுத்து வெற்றி
தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருங்காலத்தில் விரைவில் பொதுச் செயலாளராக ஆக உள்ளார். முதல்வருக்கு இதயமென ஒன்று இருந்தால் அதை தொட்டுச் சொல்லுங்கள் அவர் தகுதி படைத்தவரா இல்லையா என்பதை. பொய் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்று எதையுமே நிறைவேற்றாததால் தமிழக மக்கள் முதல்வர் மீது மட்டுமல்ல அல்ல, அவரின் குடும்பம் மீது கோபத்தில் இருக்கின்றனர். முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என கூறுகிறார். என்ற கேள்விக்கு, முதல்வர் ஜோக் செய்கிறார்.அதற்கு சிரிக்கத் தான் செய்ய வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் போட்டோக்கு போஸ் குடுக்கிறார் டிவியில் வருகிறார் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார். வடிவேலு இல்லாத குறையை தமிழக அமைச்சர்களும், முதல்வரும் போக்குகிறார்கள் என தெரிவித்தார். மக்களுக்கு அல்வா கொடுத்த முதல்வர் தற்போது அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.
ஓபிஎஸ் கேள்வி- கோபமடைந்த செல்லூர் ராஜூ
ஓ.பி.எஸ் உண்மை சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு கேட்க கோபமடைந்த செல்லூர் ராஜூ, தேவையில்லாமல் கேட்கிறீர்கள், சும்மா திரும்பப் திரும்ப அதே கேள்வியே கேட்பீர்களா?? அதிமுக பற்றி கேட்பீர்கள் என்றால் பேட்டியே நான் கொடுக்கத் தேவையில்லை தலைவர்களே கொடுப்பார்கள் என கூறினார். இதனை தொடர்ந்து ராகுல் காந்தி குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்ப குஷியான செல்லூர் ராஜூ, இப்படிக் கேள்வி கேளுங்கப்பா... என கூறினார். ராகுல் காந்தி ஓர் இளம் தலைவர். அவரின் அரசியல் பயணத்தில் தேச ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்., அது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா எனத் தெரியவில்லை, ராகுல் காந்திக்கு நல்ல பெயரை தரும் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
சொல்லுவது ஒன்று.. செய்வது ஒன்று...! இது தான் திராவிட மாடலா..? ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்