மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. 

சீமானை ஒருங்கிணைப்பாளராக கொண்ட நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தலில், இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலிலும், அதே சின்னத்தை வழங்க, தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

 

மெழுகுவர்த்தி சின்னம் கிடைக்காத நிலையில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட சின்னத்தை தங்களது கட்சிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது நாம் தமிழர் கட்சி. அதன்படி நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கப்பட்டும் உள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயிகள் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்காக போராட்டம் செய்து வரும் தங்கள் கட்சிக்கு பொருத்தமான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் இனிப்பான மற்றும் மண் மரபு சார்ந்த கரும்புடன், விவசாயி இருப்பது போன்ற சின்னம் கிடைத்திருப்பதாலும், நாம் தமிழர் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.