அரசியலில் ‘அலட்சியம்’ எனும் ஆயுதம் மிக சிக்கலானது. கைப்பிடியற்ற கத்தி போன்ற அதை ரொம்பத் தெளிவாக கையாள தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், தன்னை வைத்திருப்போரின் கைகளையே கீறித் தள்ளிவிடும். சரி இப்ப இன்னாத்துக்கு மாமே இந்த தத்துவம்? என்று நீங்கள் கேட்கலாம்.வர்றோம் விளக்கத்துக்கு… 

அதாவது தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தாலும் கூட, அவர்களின் சொந்தப் பஞ்சாயத்தை தீர்க்கவே நேரமில்லாத காரணத்தினால் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்கள் ஆளுங்கட்சியை எதிர்ப்பதில். எடப்பாடியாருக்கு சசிகலா, தினகரனை கண்காணிப்பதை விட ஓ.பன்னீரை கவனிப்பதற்கே எக்ஸ்ட்ரா பத்துக் கண்கள் வேண்டியிருக்கிறது. பன்னீர்செல்வத்துக்கோ எடப்பாடியார் மண்டை காயுமளவுக்கு என்ன சொல்லலாம்? என்னென்ன செய்யலாம்? என்று யோசிப்பதை விடவும், சசிகலாவின் மனசும் கூல் ஆகணும், அதேவேளையில் தன் மீது தன் கட்சிக்குள் துரோக முத்திரையும் விழுந்துவிட கூடாது என்ற எச்சரிக்கையுடன் ‘ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்பே’ எனும் லெவலில் எப்படி நடந்து கொள்வது என்று யோசிப்பதற்கே எக்ஸ்ட்ராவாக பத்து மூளைகள் தேவைப்படுகிறது. 

மற்ற மாஜி அமைச்சர்களுக்கோ ‘எப்ப இன்கம்டாக்ஸ் ரெய்டு வரும்? அது எப்ப முடியும்?’ என்று காத்துக் கொண்டிருப்பதிலேயே காலம் கழிகிறது. இந்த அழகில், இவர்கள் எங்கூட்டு போயி மக்கள் பிரச்னைகளுக்காக ஆளுங்கட்சியை எதிர்த்தெல்லாம் குரல் கொடுக்க போகிறார்கள். 
ஆக இன்றைய தேதிக்கு தமிழகத்தில் தி.மு.க. அரசை எதிர்த்து சவுண்டு விடும் இரண்டு கட்சிகளில் ஒன்று இந்த தேசத்தை ஆளும் பி.ஜே.பி. மற்றொன்றோ, தம்பிகளின் அண்ணன் சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி. இவற்றில் முன்னதாவது தர்க்க ரீதியாக தி.மு.க.வை எதிர்க்கிறது. ஆனால் சீமானோ தரையிறங்கி விமர்சன தாக்குதல் நடத்துமளவுக்கு தர்ம அடி அடிக்கிறார். அதேப்போல் திருப்பியும் தாக்கப்படுகிறார். 

அந்த வகையில், மாரிதாஸ் ரிலீஸ் விவகாரத்தில் தி.மு.க.வை பார்த்து சீமான் உமிழ்ந்த ‘தி.மு.க.தான் உண்மையான சங்கி’ எனும் வார்த்தையும், அதற்குப் பிந்தைய செருப்புக் காட்டுதல்களும் ஆளுங்கட்சியை ரொம்பவே உஷ்ணப்படுத்தியிருக்கிறது. இதனால் சீமான் எந்த சந்துபொந்தில் கூட்டம் நடத்தினாலும் தி.மு.க. சார்பாக நாலு பேர் ஆஜராகி ‘நாங்கதான் இருக்கோம்ல்’ என்று ஒரண்டை இழுக்கிறார்கள். பஞ்சாயத்தாகிறது, பிறகு சீமானுக்கு தலை வரை உஷ்ணமேறி விடுகிறது. இதைச் சொல்லி சொல்லியே தம்பிகள் புலம்பிப் புண்ணாகிறார்கள். 

இந்த நிலையில் தி.மு.க. தலைமை, தன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு கட்டளை இட்டுள்ளது வாய்மொழியாக. அதில் ‘சீமானை கண்டு கொள்ள வேண்டாம்.’ என்பதுதான் அது. அதாவது, சீமானை அலட்சியப்படுத்துங்கள், அவர் செல்லும் இடமெல்லாம் சென்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர் மீண்டும் மீண்டும் பேசுவார், இதன் மூலம் அரசியலில் அவர் வளர்வார். எனவே அவரை கண்டுக்காமல் விட்டாலே அவர் காணாமல் போய்விடுவார்! என்பதே இதன் அர்த்தம் என தி.மு.க.வினர் விளக்குகிறார்கள். 

ஆனால் விமர்சகர்களோ ‘அரசியலில் ஒருவரை ஒழித்துக் கட்ட ‘அலட்சியம்’ செய்தல் என்பது சாமர்த்தியமான ஆயுதம்தான். ஆனால் அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், பூமராங் போல் எய்தவனையே திருப்பித் தாக்கும். அதாவது சீமான் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதிலை தரவில்லையென்றால், தி.மு.க.வின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து சீமான் சொல்லும் பட்டியலையும், விளக்கத்தையும் மக்கள் நம்ப துவங்கிவிடலாம்! இது தி.மு.க.வின் தேர்தல் வெற்றிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.’ என்கிறார்கள். 

இதை ஆமோதிக்கும் சீனியர் தி.மு.க.வினரும் “நரி இடம் போனா என்ன, வலம் போனா என்ன? நம்ம மேலே பாயாம இருந்தால் சரி!ன்னு நினைக்கிறார் தலைவர். ஆனால் நாம இப்படி ஒதுங்கிப் போறதே நரிக்கு தனி கெத்தும், வீறாப்பும் கொடுக்க ஆரம்பிச்சுடுமே! என்ன பண்ண?” என்கிறார்கள். 
ஓ மை காட்!