மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை மட்டுமல்ல பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரைகுறையாக வந்து பாடம் நடத்தியதாகவும், மாணவிகளை தன்னுடன் சினிமாவிற்கு வரும் படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

நள்ளிரவில் வீடியோ கால் செய்து தொல்லை கொடுப்பது, வகுப்பு குழுக்களில் ‘பார்ன்’ வீடியோ லிங்க்குகளை பகிர்வது என எல்லை மீறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 

மாணவர்களுக்கு கல்வியோடு நல்லொழுக்கம், நற்பண்புகளை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியரே ஆன்லைன் வகுப்பில் கீழ்தரமாக நடந்து கொண்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதில், “சென்னை, கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் இராஜகோபாலன் என்பவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக எழுந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது.அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரைக் காக்கும் மருத்துவமும் வணிகப் பண்டமாக மாறிப்போன குற்றச்சமூகத்தில் நடந்தேறும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையே வெட்கித் தலைகுனியச் செய்கிறது. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்த வேண்டிய ஆசிரியரே இழிவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.