பாஜக முக்கிய பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு சீமான் தரப்பு கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்தே விஜயலட்சுமி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று காயத்ரி ரகுராமுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

சீமான் ஆதரவாளர்கள் மற்றும் ஹரி நாடார் தொடர்ந்து மிரட்டல்கள் விடுப்பதாக கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றார் நடிகை விஜயலட்சுமி. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் உடனடியாக பாஜக கலை இலக்கிய அணி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் உடனடியாக விஜயலட்சுமி வீட்டிற்கு விரைந்தார். அவரை மீட்டு அடையாறு மலர் மருத்துவமனையிலும் அனுமதித்தார் காயத்ரி ரகுராம். இதனால் விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. மறுபடியும் சீமான் – விஜயலட்சுமி பிரச்சனை தலைப்புச் செய்திகள் ஆனது.

வழக்கம் போல் சீமான் இந்த விஷயத்தில் அமைதி காக்க, அவரது ஆதரவாளர்கள் வழக்கம் போல் விஜயலட்சுமி மீது அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மலர் மருத்துவமனையில் இருந்து விஜயலட்சுமியை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு மாற்றினர். இதற்கும் நடிகை காயத்ரி ரகுராம் தான் உதவியுள்ளார். இந்த நிலையில் திடீரென நேற்று பிற்பகலில் விஜயலட்சுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து கண்ணீர்விட்டபடி விஜயலெட்சுமி பேட்டி அளித்தார். அப்போது தன்னை வைத்து சிலர் அரசியல் செய்வதாக கூறினார்.

சீமான் அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருப்பதாகவும் தனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் தற்போது தன்னை கைவிட்டுவிட்டதாகவும், தன்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளார்கள் என்றும் இதற்கு காயத்ரி ரகுராம் தான் காரணம் என்றும் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அத்துடன் தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறிவிட்டு அங்கிருந்து அவர் சென்றுவிட்டார். இது குறித்து விசாரித்த போது நேற்று முன் தினம் வரை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்த காயத்ரி திடீரென பின்வாங்கியது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர், நல்லதுக்கு காலமே இல்லை என்று ஒரே ஒரு ட்வீட் போட்டு முடித்துக் கொண்டார். அது பற்றி தொடர்ந்து வேறு எதுவும் காயத்ரி பேசவில்லை. சீமான் விவகாரத்தில் இனி தலையிட வேண்டாம் என்று பாஜக முக்கிய பிரமுகர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தான் காயத்ரி இப்படி ஒரு முடிவை எடுத்ததாக சொல்கிறார்கள். ஏனென்றால் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது உடன் இருந்த காயத்ரி, விஜயலட்சுமி டிஸ்சார்ஜ் ஆகும் போது எங்கு சென்றார்? என்கிற கேள்வி எழுந்தது.

அப்போது தான் சீமான் தரப்பு இந்த விஷயத்தில் பாஜகவின் முக்கிய பிரமுகர் ஒருவரை அணுகியது தெரியவந்துள்ளது.ஏற்கனவே மோடிக்கு எதிராக இனி அதிகம் பேசமாட்டேன் என சீமான் பாஜகவிற்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் இதன் அடிப்படையில் தான அவரது கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனுக்கு எதிராகவே சீமான் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறுகிறார்கள். தற்போதும் கூட சீமான் தரப்பு மத்திய அரசின் திட்டங்கள், மோடி குறித்த விமர்சனங்களில் மென்மைப்போக்கை கடைபிடிப்பதாக பாஜக முக்கிய பிரமுகரிடம் வாக்குறுதி அளித்ததாகவும் அதன் அடிப்படையில் தான் காயத்ரி ரகுராமை சீனில் இருந்து பாஜக மேலிடம் தூக்கியதாகவும் சொல்கிறார்கள்.

இப்படி சீமானுக்கு உதவி வரும் அந்த முக்கிய பிரமுகர் தென்மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், சீமானின் தாயார் ஜாதியை சேர்ந்தவர் என்றும், சீமான் – அந்த பாஜக முக்கிய பிரமுகர் இடையிலான உறவு பல ஆண்டுகளாக நட்புடன் தொடர்வதாகவும் சொல்கிறார்கள்.