கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது அப்போது பேசிய சீமானின் பேச்சு அனல் கிளப்பியது.  அப்போது பேசிய சீமான்; கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று தலைவர்கள் சொல்கிறார்கள். விமானம் மோதினால் கூட ஒன்றும் ஆகாதாம். எங்களால் நம்ப முடியவில்லை. எங்களுக்கு இது புரியவும் இல்லை. பள்ளியில் பாடம் புரியலன்னா, செய்முறை பாடம் நடத்துவார்கள். அதுபோல தான் எங்களுக்கு செய்முறை பயிற்சி வேண்டும்.

யாரெல்லாம் இந்த அணு உலை பாதுகாப்புன்னு சொல்லுகிறார்களோ, அவங்களை எல்லாம் ஒரு விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ ஏற்றிக்கொண்டுபோய் அணு உலை மீது ஒரு தடவை மோதிக்காட்டுங்கள். அது வெடிக்கவில்லை என்றால் நாங்க ஏத்துக்கறோம். பிரச்சினை இல்லைன்னு முடிவுக்கு வருவோம். எதற்கு நாங்கள் தண்டமாக போஸ்டர் அடிச்சு, நோட்டீஸ் அடிச்சு, கூட்டம் நடத்தப் போகிறோம். 

நான் தெரு விளக்கில் படிச்சவன். என்னை போல நிறைய பேர் இருக்காங்க. கொசுக்கடியில், ஃபேன் இல்லாம கூட இருந்துக்கறோம். ஆனா, எங்களுக்கு இந்த அணு உலை மூலம் வரும் மின்சாரம் தேவையில்ல. இந்த அணுக்கழிவு பந்து போல உருட்டிக் கொண்டு போய்விடும் என்கிறார்கள். அப்படின்னா, அமித்ஷா போன்ற தலைவர்கள் ஒரு கால்பந்துபோல் உருட்டி விளையாடுங்களேன். கோலிகுண்டுபோல் சிறிதாக உருட்டி விளையாடுங்களேன். பாப்போம்? 

இங்க பாதுகாப்பான ஒன்றுன்னு தானே சொல்றீங்க? ஏன் இதே கூடங்குளத்திலும், இடிந்தகரையிலும் புதைக்கிறீர்கள். பாதுகாப்பானது அணுக்கழிவு என்றால் நாடாளுமன்றத்துக்குக் கீழ் புதையுங்கள். இன்னும் பாதுகாப்பா இருக்குமே? 

சுமார், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் என்கிறார்கள். 50 வருஷத்துக்கு முன்னாடி எங்க தாத்தா கட்டின ஏரியை காணோம். தமிழ்நாட்டில் அதிகபட்ச பாதுகாப்பான இடம் என்றால் அது  அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெ, சமாதிகள்தான். அங்க தலைவர்கள் சமாதிக்கு இடையில் இந்த அணுக் கழிவுகளைப் புதையுங்க, அங்க வேணும்னா பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,  பெரிய ஈயத்தால் ஆன மதில்சுவரை கட்டி, அதில் அணுக்கழிவை கொட்டி 50 ஆயிரம் ஆண்டு காலம் பாதுகாப்பதாகவே வைத்து கொள்வோம். ஒரு சுனாமி வந்தால், வெள்ளம், புயல் வந்தால், பூமியை பிளக்கும் நிலநடுக்கம் வந்தால்,நாங்க இறந்தே போயிடறோம்.

2 தலைமுறைக்கு அப்புறம் அங்க ஒரு ஆழ்துறை கிணறு தோண்டினால், வீடு கட்ட தோண்டினால், அப்ப கழிவு வெளியேறினால் என்ன பண்ணுவ நீ? பாதி இந்தியா காலி ஆயிடும். எவ்வளவு பாதுகாப்பான உலையா இருந்தாலும் சரி, எனக்கு வேணாம், ஒழுங்கா  எடுத்துட்டு போயிடு என ஆவேசமாக பேசினார்.