மாநிலங்களவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் எச்.ராஜா அதை அடைக்க வேண்டியது தானே என சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன், 262-வது குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு பயப்படாமல் போராடியவர் அழகு முத்துக்கோன் என்று புகழராம் சூட்டினார். 

வைகோ மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் எச்.ராஜா அதை அடைக்க வேண்டியது தானே எனவும் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து பேசிய சீமான், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவதே நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இவ்வாறு கூறுபவர்கள் ஒரே நாடு ஒரே குளம், ஒரே கோவில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

 

மேலும், பேசிய அவர் கோதாவரி- காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துவிடுமா என்று கேள்வி எழுப்பிய சீமான், நதி நீர் இணைப்பு என்பது ஏமாற்று வேலை எனவும் குற்றச்சாட்டினார். தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆணவக் கொலைகளை குறித்து பேசிய சீமான் ஆட்சியில் இருப்பவர்கள் தான் ஆணவக்கொலைகளை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.