தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்கள் வரைபடத்தில் இருந்து நீக்கம்..! இது மோடி அரசின் சூழ்ச்சி- சீறும் சீமான்
சென்னை காட்டுப்பள்ளி கடற்கரைப் பகுதியில் அதானி நிறுவனம் துறைமுகம் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ள மோடி அரசு, தற்போது செய்துள்ள பெயர் நீக்கத்தின் மூலம் மேலும் பல தமிழ்நாட்டு கடற்கரை கிராமங்களை தனியார் துறைமுகங்கள் கட்டுவதற்குத் தாரைவார்க்க திட்டமிட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு கடற்கரை கிராமங்களைத் தனியார் பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது. கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டின் “நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு, புஷ்பவனம், விழுந்தமாவடி உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களின் பெயர்களை நீக்கியுள்ளதன் மூலம் அப்பகுதிகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை,
குடியிருப்புகள் ஏதுமில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க மோடி அரசு முயல்கிறது. அதுமட்டுமன்றி தற்போது பெயர்கள் நீக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு ஏதேனும் நாசகாரத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டத்தினை நடத்தினால், அதில் அங்கு வாழும் மக்கள் இனி அதிகாரப்பூர்வமாக பங்கேற்க முடியாது என்பதுதான் இந்தப் பெயர் நீக்கத்தின் பின்னால் அடங்கியுள்ள மிகப்பெரிய சூழ்ச்சியாகும். ஏற்கனவே மீனவ மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி சென்னை காட்டுப்பள்ளி கடற்கரைப் பகுதியில் அதானி நிறுவனம் துறைமுகம் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ள மோடி அரசு, தற்போது செய்துள்ள பெயர் நீக்கத்தின் மூலம் மேலும் பல தமிழ்நாட்டு கடற்கரை கிராமங்களை தனியார் துறைமுகங்கள் கட்டுவதற்குத் தாரைவார்க்க திட்டமிட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது.
பன்னாட்டு பெருமுதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக சொந்த நாட்டு கடற்கரைப் பகுதிகளை வளவேட்டையாடும் வாயில்களாக மாற்றி கடல் வளங்களையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்தொழிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.ஆகவே, இந்திய ஒன்றிய அரசு கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களையும் உடனடியாகச் சேர்த்து பதிவு செய்திட உத்தரவிட வேண்டுமென்றும், காட்டுப்பள்ளி உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தவொரு கடற்கரைப் பகுதியிலும் தனியார் நிறுவனங்கள் துறைமுகங்கள் அமைக்க அனுமதிக்க கூடாதெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.