ரஜினியின் அரசியலை துவக்கத்தில் இருந்தே மிக மிக கடுமையாக எதிர்த்து வரும் அரசியல்வாதிகளி முக்கியமானவர் சீமான். இத்தனைக்கும் அவர், ரஜினியின் சினிமா துறையை சேர்ந்தவரும் கூட. கமல் விஷயத்தில், கமலின் அரசியலில் கூட பெரிதாய் ரியாக்ட் பண்ணாத சீமான், ரஜினியின் அரசியலுக்கு மட்டும் தாறுமாறாக எதிர்ப்பு காட்டுவார். இந்த நிலையில், ரஜினியின் புதிய படமான ‘தர்பார்’படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ்.”ஸ்டாலின், எடப்பாடி ஆகியோர் மேடையைத் தவறாக உபயோகிப்பதில்லை. ஆனால் அரசியல் மேடையில் நாகரிகமே இல்லாமல் சிலர் பேசுகிறார்கள். இந்த மேடையில் நான் இப்படிப் பேசுவதால் இதற்குப் பிறகு தலைவர் என்னிடம் பேசாமல் இருந்தாலும் கவலையில்லை. நான் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். ஒரு தலைவர் மட்டும்தான் நாகரிகம் இல்லாமல் பேசுகிறார். அது நம் நாட்டுக்கு நல்லதல்ல. மற்றவர்களைத் தாக்கிப் பேசினால் என் தலைவருக்கு பிடிக்காது. ஆனால் அந்த தலைவர் எல்லாரையும் தப்பாகப் பேசுகிறார். இனிமேல் அது நடக்கக் கூடாது. என் தலைவனைப் பற்றி தவறாக பேசினால், நானும் பேசுவேன்.” என்று தர்பார் விழாவில் தாறுமாறாக தீயை பற்ற வைத்தார். 

ராகவா பேசியது, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானைத்தான்! என்பது எல்லோருக்குமே சட்டென புரிந்தது. இந்த விவகாரம் அந்த விழா நடந்து கொண்டிருக்கும் போதே சீமான் தரப்புக்கு தெரிய வந்தது. சீமான் கட்சியின் நிர்வாகிகள் கடும் டென்ஷன் ஆனார்கள். ராகவா லாரன்ஸை வைத்து செய்து சோஷியல் மீடியாக்களில் பதிவுகள் பறந்தன. குறிப்பாக, ‘லாரன்ஸுக்கு பதவி வெறி வந்துடுச்சு. ரஜினியின் காலை பிடிச்சுட்டு ஒக்காந்திருந்தால், அவரு கட்சி துவக்குறப்ப ஏதாச்சும் கிடைக்குமுன்னு நம்புறார். அதுக்காக தமிழர் தலைவர் சீமானை எதுக்கு வம்புக்கிழுக்கணும்?’ என்று துவங்கி பல வகைகளில் வெளுத்தெடுத்தனர். 

ராகவாவின் இந்த பேச்சு பற்றி கருத்து தெரிவித்திருக்கும் சீமான் “ நான் மனசுல பட்டதை, உண்மையை வெளிப்படையாக பேசும் ஆள். என் மேலே என்னென்ன விமர்சனங்கள் வெச்சாலும், என்னை மாத்திக்க முடியாது. ஆனால் லாரன்ஸ் ஏன் எதையும் பகிரங்கமா சொல்ல தயங்குறார்? என்ன பிரச்னை அவருக்கு? தம்பி லாரன்ஸ் சொல்வது எந்த நாட்டிற்கு பொருந்துமுன்னு தெரியலை. ஆனால் நான் என் நாட்டிற்காக பேசி வருகிறேன்.” என்று நாலே வரிகளில் நறுக்குன்னு பஞ்ச் கொடுத்திருக்கிறார்.