இனி அரசியல் பிரவேசம் இல்லை என இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள் எடுத்த முடிவு வரவேற்கிறேன் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.   

வழக்கமாக அதிமுக-திமுக என திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த சீமான்,  ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று அறிவித்தது முதல்  அவரின் மொத்த எதிர்ப்பும் ரஜினி குறிவைத்தே இருந்தது. சினிமா நடிகர் என்ற புகழ் வெளிச்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவது எந்த வகையில் நியாயம் எனமேடைகள் தோறும் ரஜினிக்கு எதிராக பொங்கி வந்தார் சீமான். அரசியல் கட்சியைத் தொடங்கி நேரடியாக முதல்வராக வேண்டும் என ரஜினி விரும்புவது தமிழக மக்களை இழிவாகவும், குறைவாகவும் மதிப்பிடும் ரஜினியின் மனநிலையை காட்டுகிறது எனவும் சீமான் ரஜினி காட்டமாக விமர்சித்து வந்தார். 

ரஜினி இன்னும் 100 படங்கள் கூட நடிக்கட்டும் அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால் அரசியலுக்கு வருகிறேன் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்,  ரஜினி வேண்டுமானாலும் கர்நாடகத்திலும், மகாராஷ்டிராவிலும் போய் அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும் என ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தார் சீமான். சமீபத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மீன்வர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து  நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான், அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கி போராட வேண்டுமே தவிர, திரைத்துறையில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் செல்வாக்கை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது. நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்து விடும் என்கிற எண்ணம் மாற வேண்டும். ஐயா நல்லகண்ணு தவிர இங்கு யாரும் நல்ல அரசியல்வாதி அல்ல. எடப்பாடி யார் தமிழர்தான் ஆனால் அவர் ஆட்சி நன்றாக இல்லை. எனவே நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம், அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ரஜினிக்கு எதிராக சீமான் ஆவேசமாக கருத்து கூறினார். 

வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும், கமலுக்கும் கிடைக்கும் அடியில் விஜய் கூட இனி அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். தமிழக அரசியல் குறித்து ரஜினிக்கு என்ன தெரியும் எனவெல்லாம் கடுமையாக விமர்சித்திருந்தார் சீமான்.  இந்நிலையில் திடீரென தனது உடல்நிலையை காரணம் காட்டி நடிகர் ரஜினிகாந்த், தன்னால் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியாது என அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மற்றும் அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சீமான், இனி அரசியல் பிரவேசம் இல்லை என இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்! இவ்வாறு பதிவிட்டுள்ளார்.