நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாணசுந்தரம் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நேற்று  இணைந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காக செயல்படக்கூடிய ஒரே கட்சி அதிமுகதான். தமிழகத்திற்கு எதிரான எந்த திட்டங்களையும் செயல்படுத்தாது என்ற நம்பிக்கையில்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன்.


திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரான நிலைப்பாடு தனக்கு இருந்தாலும், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடிமட்ட தொண்டனையும் உயரத்தில் அமர வைக்கும் கட்சி அதிமுகதான். சீமான் மீது விஜயலட்சுமி சொல்லும் புகார்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. திமுக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், நாடு நன்றாக இருக்காது. தற்போதைய நிலையில்  அறிவுரைகளை ஏற்கும் மனநிலையில் அண்ணன் சீமான் இல்லை” என்று கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.