Asianet News TamilAsianet News Tamil

எல்லாத்தையும் பிரிச்ச முதல்வர், சொந்த மாவட்டத்தில் மட்டும் ஏன் கை வைக்கல..? கொளுத்திப்போட்ட சீமான்..!

சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

seeman demands to divide salem
Author
Salem, First Published Nov 17, 2019, 4:30 PM IST

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்கி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

seeman demands to divide salem

தமிழகத்தில் இருந்த மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்திருப்பதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து, அதற்கான அரசாணைத் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பரப்பளவில் பெரியதாக இருக்கிற மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகத்தான் பிரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன். அதேநேரம், மாவட்டப்பிரிப்பு கோரிக்கையை நெடுநாளாகக் கொண்டிருக்கும் பெரிய மாவட்டமான சேலம் மாவட்டத்தை இன்னும் பிரிக்காதிருப்பது ஏனென்று புரியவில்லை. கோரிக்கை வராத மாவட்டங்களைப் பிரித்த தமிழக முதல்வர் தனது சொந்த மாவட்ட மக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?.

seeman demands to divide salem

சேலம் மாவட்டத்தின் தற்போதைய மக்கள் தொகை 34.82 லட்சமாக உள்ளது. இதில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகராட்சியாகவும் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆத்தூர் விளங்குகின்றது. ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அவசர தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணிகளுக்குச் செல்வதற்கு 3 மணி நேரமாகிறது. அதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் 130 ஊராட்சிகளை இணைத்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.

seeman demands to divide salem

அண்மையில் சுதந்திர தின விழா அன்று கிராம சபை கூட்டத்தில் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆகவே இப்பொழுது பிரிக்கப்பட்டிருக்கிற மாவட்டங்களை விடப் பரப்பளவில் பெரிய மாவட்டமாகச் சேலம் இருப்பதால் தமிழக முதல்வர் உடனடியாகச் அம்மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios