seeman criticized kamalhaasan

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு ஆதரிக்கும் வகையில் கமல் பேசியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றார். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்கவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவானதை அடுத்து, அந்த சமயத்தில் விஜயேந்திரர் தியானம் செய்ததாக காஞ்சி மடம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக்கூடாது. தியானம் செய்வது விஜயேந்திரர் கடமை. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது எனது கடமை என தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு கண்டனமோ அவருக்கு எதிர்ப்போ கமல் தெரிவிக்கவில்லை.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கட்டுரைக்காக, அவரை இழிவாகவும் கொச்சையாகவும் சிலர் விமர்சித்தபோது, வைரமுத்து ஆதரவாக குரல் கொடுக்காத கமல், விஜயேந்திரருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டாம் என கமல் அறிவுறுத்தியுள்ள கமல்ஹாசன், எதனை கண்ட இடம் என குறிப்பிடுகிறார்? எத்தனை இடங்களில் தேவையற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது? கமல்ஹாசனிடம் பட்டியல் ஏதும் இருக்கிறதா? ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அதுவும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் உள்ளிட்ட பலதரப்பட்ட பெருமக்கள் வீற்றிருக்கிற ஒரு அவையில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதில் என்ன பிழை? அதே கண்ட இடத்தில்தானே தேசியகீதம் பாடப்பட்டது. அதனை வேண்டாமென்று கமல்ஹாசன் கூறவில்லையே? எழுந்து நிற்க வேண்டியது எனது கடமை; தியானம் செய்ய வேண்டியது அவரது கடமை’ என்கிற கருத்தின் மூலம் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த தேவையில்லை என்கிறாரா கமல்ஹாசன்?

கண்ட இடத்தில் தமிழைத் தொழக்கூடாது என்பவர் கண்ட இடத்தில் தியானம் செய்யக்கூடாது என விஜயேந்திரருக்கு அறிவுறுத்த மறுப்பதேன்?

கமல்ஹாசனுக்கு உற்ற நண்பராக இருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து மீது வசைமொழிகள் பொழிந்த போதும், அவரின் தாயை இழிவாகப் பழித்துரைத்த போதும் வாய்திறக்காது மெளனமாய் தியான மனநிலையில் இருந்த கமல்ஹாசன், விஜயேந்திரர் விவகாரத்தில் வாய்திறந்து அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதன் அரசியல் என்ன என்பதனை விளக்க வேண்டும். விஜயேந்திரர் தமிழன்னையை அவமதித்ததைவிட அவருக்கு ஆதரவாய் கமல்ஹாசன் கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் அவமரியாதையை ஏற்படுத்துகிறது. எனவே, அக்கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், தன்னை உத்தமராகக் காட்டிக்கொள்ள மக்கள் மீது பழியைப் போடும் போக்கை கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.