சுபஸ்ரீ உயிரிழந்தது விதி என்றும், அதற்காக அதிமுகவை குறை கூற கூடாது என்றும் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு நாம் தமிழர் கட்சி இருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்ததால், அதில் தடுமாறு டூவிலருடன் கீழே விழுந்த இளம் பெண் சுபஸ்ரீ லாரி மீது பலியானார். தமிழகத்தைப் பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் பொதுமக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பல்வேறு கட்சிகளும் இனி பேனர் வைக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளன. இந்த விபத்தில் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி ஆளுங்கட்சியைப் பலரும் விமர்சித்துவருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விபத்து பற்றி கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “சுபஸ்ரீ மரணம் யதார்த்தமாக நடந்த ஒரு விஷயம்தான். சுபஸ்ரீ அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும்போது காற்றில் பேனர் விழ வேண்டும்; தண்ணீர் லாரி அவர் மீது ஏற வேண்டும்; அவர் இறக்க வேண்டும் என்று விதி இருந்திருக்கிறது. அது நடந்துவிட்டது. இது யதார்த்தமாக நடந்த ஒன்று. சுபஸ்ரீ உயிரிழந்தது விதி” என்று தெரிவித்திருந்தார்.


அவருடைய பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். “விழாக்களில் வழி நெடுக பேனர்கள் வைப்பது தவறு. சுபஸ்ரீ மரணத்தில் பேனர் அச்சிட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேனரை வைத்தவர் மீது நடவடிக்கை இல்லை. இதை விதி என்று சொல்லமுடியாது. அரசின் சதி; சூழ்ச்சி. தனது கட்சிக்காரரைக் காப்பாற்றச் செய்யும் முயற்சி. கூட்டணியில் இருப்பதால் ஒருவர் விதி என்கிறார். இது உயிர் பிரச்சினை. இதைப் பேசாமல், கட்சிகள் எதைப் பேசப்போகின்றன?” என்று கண்டனம் தெரிவித்தார்.