நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இயக்குனரும் நடிகருமான இவர் தம்பி, வாழ்த்துகள் போன்ற படங்களை இயக்கியத்துடன் மாயாண்டி குடும்பத்தார் என சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். திராவிட இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றி வந்த சீமான், 2009ம் ஆண்டு நிறைவு பெற்ற ஈழப்போருக்கு பிறகு தமிழ்த்தேசிய அரசியலை கையிலெடுத்தார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியை மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறார்.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழரை முன்னிலைப்படுத்தும் சீமான், தற்போது வரை அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வருகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் பெற்று பெரிய கட்சிகளையே ஆச்சரியப்பட வைத்தார். தமிழக உள்ளாட்சித்தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இந்தநிலையில் சீமானுக்கும் தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்து மகளான கயல்விழிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி 11 அன்று சீமான்-கயல்விழி தம்பதியினருக்கு மகன் பிறந்தான். மகனுக்கு 'மாவீரன் பிரபாகரன்' என மேடைக்கு மேடை முழங்கும் தனது தலைவரின் பெயரை சீமான் சூட்டியுள்ளார். மகன் பிறந்து ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் நேற்று மாவீரன் பிரபாகரனுக்கு முதலாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இருக்கும் சீமான் வீட்டில் உறவினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் அழைக்கப்பட்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. மகனுக்கு கேக் வெட்டி சீமானும் கயல்விழியும் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து வந்திருந்தவர்களுக்கு மதிய விருந்து நடைபெற்றது.