Asianet News TamilAsianet News Tamil

எம்.ஜி.ஆர். விழா, ஜெயலலிதா மணிமண்டபம் கட்ட சொந்த காசை செலவு பண்ணுவீங்க... கீழடிக்கு மட்டும் அவங்ககிட்ட கேப்பீங்களா? சூடான சீமான்

எம்.ஜி.ஆர். விழாவுக்கும், ஜெயலலிதாவின் மணிமண்டபம் கட்டுவதற்கும் தனது பொருட்செலவிலே ஏற்பாடுகளைச் செய்திட்ட தமிழக அரசு, கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார்.

seeman angry against ADMK Govt for keezhadi
Author
Chennai, First Published Sep 25, 2019, 11:33 AM IST

எம்.ஜி.ஆர். விழாவுக்கும், ஜெயலலிதாவின் மணிமண்டபம் கட்டுவதற்கும் தனது பொருட்செலவிலே ஏற்பாடுகளைச் செய்திட்ட தமிழக அரசு, கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழர்கள் நகரக் கட்டமைப்புடனும், நாகரீக வாழ்வியலுடன் வாழ்ந்ததை உலகிற்குப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்விற்குரியப் பொருட்களை வைத்திடும் அருங்காட்சியகம் அமைத்திட மத்திய அரசை தமிழக அரசு எதிர்நோக்கியிருப்பது தேவையற்றதாகும். இது கீழடி ஆய்வு முடிவுகளை உலகிற்கு அறியத்தருவதில் மேலும் தாமதப்படுத்துமே ஒழிய, எந்தவொரு ஆக்கப்பூர்வப் பணிகளுக்கும் உதவாது என்பது வெளிப்படையானது.

seeman angry against ADMK Govt for keezhadi

கீழடி ஆய்விற்குத் தொடக்கம் முதலே முட்டுக்கட்டை போட்டு முதல் இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை வெளியிடாமலும், ஆய்வுக்குரிய வசதிகளைச் செய்துதராமலும், சரிவர ஆய்வுசெய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்துமென கீழடி ஆய்வு முடிவுகளை மூடி மறைக்கும் நயவஞ்சகச் செயலை செய்து வரும் மத்திய அரசு ஒருபோதும் கீழடி நாகரீகத்தை வெளிக்கொணர்ந்து உலகிற்குத் தமிழர்களின் தொன்மத்தை அறியத் தருவதை ஒருநாளும் விரும்பாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியப் பெருநிலத்தின் பூர்வக்குடிகள் தமிழெரென்பதும், இந்நாட்டின் தொன்ம வரலாறே தமிழர்களிடமிருந்துதான் தொடங்குகிறது என்பதும் கீழடி ஆய்வு முடிவுகள் நமக்குத் தெரிவிக்கும் செய்திகளாகும்.

இவ்வாய்வு முடிவுகள், தமிழர்களை இந்துக்கள் என அடையாளப்படுத்தி, இந்திய நாட்டை இந்துக்கள் நாடென நிறுவ முற்படும் சிந்தனையின் மீது ஆணி அடித்திருக்கிறது. இந்திய வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு அதனை மொத்தமாக மாற்றி எழுதக்கூடிய அழுத்தத்தை வரலாற்றிஞர்களுக்கு உருவாக்கும் கீழடி ஆய்வு முடிவுகள் என்பது தொல்லியல் துறையின் ஆய்வின் ஒரு மைல் கல்லாகும்.

110 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இடத்தில் கால்பங்குகூட முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில் அங்கு காணக் கிடைத்திருக்கும் பொருட்களும், அவைகள் தரும் செய்திகளுமே தமிழ்த்தேசிய இனத்தை புத்தெழுச்சி பெறச்செய்து அதன் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்ய உதவுகின்றன. கீழடியின் 110 ஏக்கரும் முழுமையாகத் தொல்லியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகிறபோது அது ஒட்டுமொத்த உலகையே தமிழர்கள் பக்கம் திருப்பும் வரலாற்றுப் பெருமிதத்தைத் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களை ஆவணப்படுத்துவதற்காகத் தமிழக அரசே தனது பொருட்செலவில் அருங்காட்சியகம் அமைத்திடும் பணியைத் தொடங்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கும், அம்மையார் ஜெயலலிதாவின் மணிமண்டபம் கட்டுவதற்கும் தனது பொருட்செலவிலே ஏற்பாடுகளைச் செய்திட்ட தமிழக அரசு, கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது. தமிழ்த்தேசிய இனத்தின் நலனுக்கு எப்போதும் எதிர்நிலையில் இருக்கும் பாஜக அரசு, கீழடி எனும் தொன்மத் தமிழ் நாகரீகத்திற்கு உதவும் என்றெண்ணுவது தவறு.

seeman angry against ADMK Govt for keezhadi

எனவே, தமிழக அரசு உடனடியாகத் தனது நிதியினை ஒதுக்கீடு செய்து கீழடி ஆய்வுக்குரிய அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும் எனவும், கீழடி ஆய்வுபொருட்களை பெங்களூர்க்குக் கொண்டு செல்லாது தமிழகத்திலேயே வைத்து ஆவணப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios