காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது. போராட்டம் நடைபெற்று வருவதால், ஐபிஎல் போட்டியை வேறிடத்துக்கு
மாற்ற போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஐபிஎல் நிர்வாகமே சென்னையில் திட்மிட்டபடி அந்தந்த தேதிகளில் நடக்கும் என்று கூறியது.

இதையடுத்து, கடந்த 10 ஆம் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைக் கண்டித்து அண்ணா சாலையில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பாரதிராஜா வைரமுத்து, தங்கர்பச்சான் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் ஈடுபட்டன. அப்போது, காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீஸ்சாரை போராட்டக்காரர்கள் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சீமான் உள்பட 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 10 வழக்குகள் போடப்பட்டன.

இந்த நிலையில், தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்தில் பாரதிராஜா, கௌதமன், ராம், சீமான், அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீசாரால் கைதும் செய்யப்பட்டனர். சென்னையில் போராட்டம் நடத்திய சீமானையும்
போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சீமானிடம் போலீசார் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு அதி விரைவு பாதுகாப்பு படை சீமானிடம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா மண்டபத்தைச் சுற்றி அதிரடிப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெ.மணியரசன், தமிழன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன் ஆகியோரையும் கைது செய்ய போலீஸார் ஆயுத்தமாகி வருகின்றனர். மண்டபத்தைச் சுற்றி போலீஸார்
குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக் பேட்டி அளித்த இயக்குநர் பாரதிராஜா, யாருடைய உத்தரவுக்காக போலீஸ் இன்னும் காத்திருக்கிறது என்று எழுப்பியுள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வதாக பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகள் பிரச்சனைக்கு செவிசாய்க்காமல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். தமிழகத்துக்கு வந்த மோடி காவிரி குறித்து ஏதாவது கூறிவிட்டு போய் இருக்கலாம் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.