seeman advised to his party social media activists
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை விமர்சிக்க வேண்டாம் என நாம் தமிழர் கட்சி சமூக வலைதள செயற்பாட்டாளர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் மற்ற அரசியல் கட்சியினரை விட சிறப்பாக செயல்படுவது நாம் தமிழர் கட்சியினர் தான் என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினரில் செயல்பாடுகள் தீவிரமாகவும் வேகமாகவும் இருந்துவருகிறது.
சமூக வலைதளங்களை பயனுள்ள முறையில் நாம் தமிழர் கட்சியினர் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். மற்ற கட்சியினரை விமர்சனம் செய்வதில் தொடங்கி, நாம் தமிழர் கட்சி மற்றும் சீமான் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது என மிகவும் தீவிரமாக சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள செயற்பாட்டாளர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவற்றில் மிக முக்கியமானது, நாம் தமிழரின் இலக்கு மற்றும் விமர்சனங்களை பற்றியது தான்.
அதில், எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக அரசியலில் தமிழர் இன அரசியலின் தேவை அதிகரித்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.
நமது செயல்பாடுகள், கருத்துகள் ஆகியவை கட்சியின் வளர்ச்சி சார்ந்து அமைய வேண்டுமே தவிர நமது நோக்கம் சிதறி கட்சிக்கு வீண்பழி ஏற்படுத்துவது போன்று அமைந்துவிடக் கூடாது. அண்மை காலமாக நாம் தமிழர் கட்சி என்ற போர்வையில், அண்ணன்கள் திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் மற்றும் சக தமிழ் அமைப்புகளின் தலைவர்களை இழிவான வார்த்தைகளில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதை நிறுத்த வேண்டும். அதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் உதவ வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழர் தான் தமிழகத்தை ஆளவேண்டும். தமிழகத்தை ஆட்சி செய்வதற்கான முதல் தகுதி என்பது தமிழராக இருக்க வேண்டும் என்பதை பிரதான கொள்கையாக முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் சீமான், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.
ஆனால், மாற்று அரசியலை முன்னெடுக்கும் அன்புமணி மீது சீமான் விமர்சனங்களை பொதுவாகவே முன்வைப்பதில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மாற்று சக்திகளை ஒன்றிணைக்கும் வகையில், அன்புமணி, திருமாவளவன் போன்ற தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களை விமர்சிக்காதீர்கள் என தனது கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழர் அல்லாத ரஜினி தமிழக அரசியலுக்கு தேவையில்லை என விமர்சித்துவரும் சீமான், ”தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களை விமர்சிக்காதீர்கள். தமிழர் இன அரசியலை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று குறிப்பிடுவது, ரஜினியை வேண்டுமானால் விமர்சியுங்கள் என்று மறைமுகமாக கூறுவதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
