சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று நள்ளிரவில் மோதல் சம்பவம் நடந்தது. அதில், திமுக தொண்டர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தொண்டர்களை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்க சென்றார். அங்கு அவர்களிடம் நல விசாரித்த பின்னர், மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக சசிகலா ஆதரவாளர் தினகரன் அணியினர், நேற்று இரவு வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அதை தடுத்த திமுக தொண்டர்களை, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
ஜனநாயகத்தை படுகொலை செய்து பண நாயகத்தால் வென்று விடலாம் என தினகரன் அணியினர் நினைக்கின்றனர். பணம் பட்டுவாடா செய்பவர்களை போலீசாரும் தப்ப விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
பணத்தை கொடுத்து டெபாசிட் வாங்கும் அளவுக்காவது வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கிறார்களா அல்லது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்களா என தெரியவில்லை. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் முறையிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.