சேலத்தில் பாலம் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திக் காட்டியுள்ளார் ஓபிஎஸ்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அப்செட்டில் இருக்கிறார். பல்வலி என்று கூறி கடந்த ஒரு வாரமாகவே வீட்டிலேயே முடங்கி இருந்தார் எடப்பாடி. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் அரசு நிகழ்ச்சியாக சேலத்தில் ஈரடுக்கு பாலம் திறப்பு விழாவில் எடப்பாடி கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாலம் திறப்பு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு அதிமுக அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டார். மேலும் ஈரடுக்கு பாலம் எவ்வாறு சேலத்திற்கு வந்தது என்கிற கதையையும் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் 8 வழிச்சாலை திட்டம் தற்போது விரைவுச்சாலை திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளை சமாதானப்படுத்தி அவர்களின் ஒப்புதலோடு அந்த சாலை திட்டத்தை செயல்படுத்தும் என்றும் எடப்பாடி தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குரலில் ஒரு தொய்வு தெரிந்தது. வழக்கமாக சேலத்தில் பேசும்போது எடப்பாடி எப்போதும் உற்சாகமாகவும் ஆவேசத்துடனும் பேசுவது வழக்கம். தேர்தல் தோல்வியை தொடர்ந்து நடைபெறும் முதல் அரசு விழா என்பதால் இங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அது குறித்து ஏதேனும் தன்னுடைய கருத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் வழக்கமாக ஒரு கதை கூறி அரசியல் பேசும் எடப்பாடி பழனிசாமி இந்த முறை எந்த கதையும் பேசவில்லை. இதேபோல் மருந்துக்குக் கூட அரசியல் வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. தேர்தல் தோல்வி குறித்தும் வாயைத் திறக்கவில்லை. நிகழ்ச்சியை முடித்து விட்டு அமைதியாக வீட்டிற்குள் சென்றுவிட்டார். 

அதே சமயம் சென்னையில் இருந்தால் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று முழுவதும் மிகவும் பிஸியாக இருந்தார். திடீரென தனது துறைக்கு கீழுள்ள அதிகாரிகளை அனைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தி தலைமைச் செயலகத்தை பரபரப்பாக்கினார். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தனது துறை அதிகாரிகளை அழைத்து பல்வேறு திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். 

இது குறித்த புகைப்படம் மற்றும் செய்தி குறிப்புகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அனைத்து ஊடகங்களுக்கும் உடனடியாக அனுப்பி வைத்தது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் சுறுசுறுப்பாக இருப்பது மறைமுகமாக ஏதோ ஒன்றை உணர்த்துவது போல் இருக்கிறது.