Secret police monitoring the safety of Pooncharan

பரமசிவன் கழுத்து பாம்பை பார்த்து எத்தனை பேர் பயப்படுகிறார்களோ தெரியவில்லை! ஆனால் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் பம்மி, பதுங்கி, பயபக்தி காட்டிய மாண்புமிகுக்களும், அதிகாரிகளும் ஏராளம் ஏராளம். இன்று முதல்வர், துணை முதல்வர் என்று கெத்து காட்டுபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அம்மாவின் கவனத்துக்கு தங்களின் கோரிக்கையை கொண்டு சென்றது பூங்குன்றனின் வழியாக மட்டுமே. பூங்குன்றனிடம் ஒரு பழக்கம் உண்டு! யாருக்கு சாதாரணமாக போன் செய்தாலும், ஆரம்பிக்கும் போது ‘ஒண்ணுமில்ல’ என்றபடிதான் யதார்த்தமாக பேச ஆரம்பிப்பார். 

பூங்குன்றனின் எண்ணிலிருந்து போன் வந்தால், ‘அம்மாவின் உத்தரவு எதையோ சொல்லப்போகிறார்!’ என்கிற பயத்துடனே அதை அட்டெண்ட் செய்யும் மந்திரிகள் வழக்கம் போல் ‘ஒண்ணுமில்ல’ என்று பூங்குன்றன் ஆரம்பித்தால் ‘அப்பாடா உண்மையிலேயே பிரச்னை ஒண்ணுமில்ல.’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி பேச்சை தொடர்வார்கள். ஆனால் ஒருவேளை பூங்குன்றன் அந்த வார்த்தையை சொல்லாமல் ‘நான் அம்மா ஆபீஸ்ல இருந்து பேசுறேன்’ என்கிற ஃபார்மலான வார்த்தையை சொல்லிவிட்டால் போதும் இங்கே மாண்புமிகுக்களுக்கு டயரியா ஆரம்பமாகிவிடும். ஏதோ மிகப்பெரிய பஞ்சாயத்து என்று புரிந்து கொள்வார்கள். இந்த போன் அழைப்பின் முடிவில் அந்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர் அந்தஸ்தும் பிடுங்கி நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட உதாரணங்கள் பல உண்டு. 
ஒட்டுமொத்தத்தில் பூங்குன்றனை ஜெயலலிதாவின் மவுத் பீஸாகத்தான் பார்த்து அரண்டனர் அமைச்சர்களும், அ.தி.மு.க.வின் பெருந்தலைகளும்.

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அக்கட்சியினரிடம் வசூலித்து கொட்டிய நபர்கள் ஏராளம். ஆனால் ஜெ.,வின் நிழலாக இருந்தும் பூங்குன்றன் முறைகேடாகவோ, சந்தர்ப்பத்தை பயன்படுத்தியோ எந்த சம்பாத்தியத்திலும் இறங்கவில்லை என்பது அ.தி.மு.க. முக்கியஸ்தர்களே சொல்லும் தகவல். 

அப்பேர்ப்பட்ட பூங்குன்றன் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு கிட்டத்தட்ட சீரழிந்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம்? ஜெயலலிதா இருக்கும் போது பூங்குன்றனை எதிரியாகவே நினைத்து முறைத்தது சசி டீம். ஆனால் பூங்குன்றன் என்றுமே அப்படி நினைத்ததில்லை, சசியிடம் உண்மையான பவ்யத்தை காட்டினார். ஜெ., மறைவுக்கு பிறகும் சசியின் ஆதரவாளராகத்தான் இருந்தார் . இந்நிலையில்தான் சசி வகையறாவில் ரெய்டு நடந்தபோது இவரது வீட்டையும் வளைத்துக் கட்டியது வ.வ.துறை. போயஸில் ரெய்டு நடந்தபோது பூங்குன்றனின் அறையையும் அங்குலம் அங்குலமாக அலசினர். ஆனால் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை. 

இந்நிலையில், இப்போது ஜெ., மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் ஆறுமுகசாமி விசாரணை முன் ஆஜராகிக் கொண்டிருக்கும் பூங்குன்றனை பார்த்தால் பரிதாபம் மேலிடுகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு பின்னே கான்வாயில் ஜெகஜோதியாய் பயணித்த பூங்குன்றன், இப்போது நண்பர் ஒருவரின் பைக்கில் தொற்றியபடி விசாரணைக்கு வந்திறங்கினார். விசாரணை முடிந்து வெளியே வந்தவரிடம் மைக்கை நீட்டினால் ‘அஷ்டமி, நவமி’ என்று பஞ்சாங்கம் பேசி சென்றார். 

ஜெயலலிதா இருக்கையில் ஒட்ட வெட்டிய முடியும், கையில் ஃபைல்களும், லேப்டாப் பேக்குமாக காணப்படுவார் பூங்குன்றன். ஆனால் இப்போது நான்கடவுள் சித்தன் போல் பெரும் தாடியும், தடித்த மீசையும், தோளை தொடும் கேசமும், நெற்றியில் பொங்கும் திலகமுமாக பூங்குன்றனின் தோற்றம் வியக்க வைக்கிறது. சசி வகையறாவிடம் நான்காயிரம் கோடிக்கு சொத்துக்கள் குவிந்திருக்கும் என்று வட்டமிட்டிருக்கும் வ.வ.து.வால் அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சசி அண்ட்கோவை இதில் எப்படியாவது சிக்க வைத்து, அவர்களை ஓட்டாண்டியாக்க வேண்டும் என திட்டமிடும் அதிகார மையமோ ‘பூங்குன்றனை துருவுங்கள், வழி பிறக்கும்.’ என்று ஐ.டி.க்கு ஐடியாக்களை எடுத்து தந்திருக்கிறது. 

இதைத்தொடர்ந்து எவ்வளவோ கேட்டும் பூங்குன்றனின் வாக்கியங்கள் எதுவும் சசி வகையறாவை வளைக்கும் விதத்தில் இல்லை. தெரிந்து கொண்டு மறைப்பவராகவும் இவர் தெரியவில்லை என்பதே அதிகாரிகளின் எண்ணம். ரெய்டின் போது பூங்குன்றனின் வீட்டில் கைப்பற்றப்பட்டது இருநூறு பவுனுக்கும் குறைவான, ஆவணமில்லாத நகைகள்தானாம். இதையெல்லாம் ஒரு பெரிய சொத்துக்குவிப்பாக மதிக்கவில்லை சம்பந்தப்பட்ட துறை. ஆனால் வேறேதும் கிடைக்காததால் இதை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

அந்த நகைகளை ‘சார் என் குடும்ப நகைகள். திருப்பிக் கொடுங்க ப்ளீஸ்’ என்று குன்றன் குமுறி கேட்டபோது ‘நகைகள் வந்ததற்கான அதார ஆவணங்களை காட்டுங்க, இல்லேன்னா அதோட மதிப்புக்கு பாதி தொகையை கட்டிட்டு எடுத்துட்டு போங்க.’ என்றார்களாம். சில லட்சங்களை தொடுகிறதாம் அந்த தொகை. ஆனால் ‘அவ்ளோ பணம் எங்கிட்ட ஏது? நீங்களே வெச்சிருங்க.’ என்று பூங்குன்றன் புலம்பலாக சொன்னதை பார்த்து அதிகாரிகள் நெளிந்திருக்கிறார்கள். 

இப்படியிருக்க ஆளும் தரப்பு மற்றும் சசி தரப்பு இரண்டுமே பூங்குன்றனை தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறதாம். காரணம்? ‘பூங்குன்றன் நம் பக்கம் வந்துவிட்டால் ஜெயலலிதா சுகவீனப்பட்டது பற்றிய உண்மைகளை இவரது வாயிலாகவே மக்களிடம் சொல்லி தினகரன் அண்ட்கோவின் ஆட்டத்தை காலி செய்யலாம். இது உள்ளிட்ட பல லாபங்கள்.’ என்று நினைக்கிறது ஆளும் தரப்பு. சசி தரப்போ ‘பூங்குன்றன் நம் பக்கம் இருந்தால்தான், விசுவாசமான அந்த நபரே சசிக்கு ஆதரவாக இருக்கிறார் என்றால் ஜெயலலிதாவுக்கு சசி எந்த தீங்கும் செய்துவிடவில்லை! என மக்கள் நம்புவார்களே.’ என்று நினைக்கிறது. 

ஆக இரண்டு பக்கமும் இவர்கள் ஆளுக்கொரு கரத்தை பிடித்திழுக்க, ஐ.டி.தரப்போ மேலிருந்து கழுத்தை பிடித்து இழுக்க அய்யோ பாவமாய் பரிதவிக்கிறார் குன்றன். இந்த சூழலில் ‘எந்த பாதுகாப்பும் இல்லாமல் பூங்குன்றன் சுற்றுவது அவ்வளவு நல்லதில்லை. அவரது உயிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யுங்க.’ என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் வந்திருக்கிறதாம். ஏன் இந்த கோணம்? என்று கீழ்நிலை அதிகாரிகளுக்கு புரியவில்லை ஆனாலும், மேலதிகாரிகளின் உத்தரவுப்படி பூங்குன்றனை நிழலாய் பின் தொடர்ந்து பாதுகாக்கிறதாம் ஒரு ரகசிய போலீஸ் டீம்!
பரமசிவன் கிளம்பிய பிறகு பாம்பு படும் பாட்டை பாருங்கள் மக்கழே!