நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை  உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு காவல்துறைக்கு மேலிடத்தில் இருந்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியதற்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தான் காரணம் என்று போலீசார் நம்பி வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையில் கூட நாம் தமிழர் கட்சியினரால் தான் போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதாக போலீசார் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்போதே சீமானை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சீமான் உயர்நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்று தப்பினார்.

 இதனை தொடர்ந்து திருச்சியில் வைகோவை வரவேற்க சென்ற ம.தி.மு.க தொண்டர்களுக்கும் சீமானை வரவேற்க சென்ற நாம் தமிழர் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த பிரச்சனையில் தொடர்பே இல்லாத சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அதிலும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சீமானை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை மூலம் சீமான் ஜாமீன் பெற்றார். ஆனால் அவரை மதுரையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். போலீசாரின் கெடுபிடி அதிகமானதால் சீமான் தனது அரசியல் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.

 இந்த நிலையில் முன்ஜாமீன் நிபந்தனைகள் தளர்ந்த நிலையில் தற்போது மீண்டும் சீமான் பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்துள்ளார். இது மேலிடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தலைவர்கள் பலரும் ஸ்டெர்லைட் குறித்து பேசுவதை குறைத்துக் கொண்டனர்.  சீமான் மீண்டும் பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்துள்ளதால் ஸ்டெர்லைட் விவகாரத்தை அவர் கையில் எடுக்கலாம் என்று மேலிடம் கருதுகிறது. இதனால் அவர் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசாத வகையில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு காவல்துறைக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது. 

இதனை தொடர்ந்தே கடந்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும் தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பொதுக்கூட்டத்தில் சீமான் வழக்கமாக பேசுவதையே பேசியுள்ளார். புதிதாக அவர் எதையும் பேசவில்லை. அப்படி இருந்தும் அவர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கைது செய்து சிறையில் அடைக்கத்தான் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கிலும் சீமான் முன்ஜாமீன் கோரும் போது உயர்நீதிமன்றம் நிச்சயம் மறுப்பு தெரிவிக்கும் என்றும் அதனை தொடர்ந்து சீமான் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.