குஜராத்தில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலையை பொதுமக்கள் காண வசதியாக பிரதமர் மோடி இன்று தண்ணீரில் செல்லும் Sea Plane சேவையை தொடங்கி வைக்கிறார். இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி நர்மதா மாவட்டம் கெவாடியாவில் அமைக்கப்பட்ட ஆரோக்கிய வனத்தை திறந்து வைத்தார்.
 
17 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் நிறைந்த பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் மூலிகை செடிகள் நடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் பூங்காவையும் திறந்து வைத்த பிரதமர் ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையையும் பார்வையிட்டார். பின்னர் ஒற்றுமை சிலைக்கான இணையதளம், கெவாடி செயலி ஆகியவற்றையும் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார். மூவர்ண கொடி போன்றும், பல்வேறு வண்ணங்களில் ஜொலிப்பது போற்றும் சர்தார் சரோவர் அணை மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த மின் அலங்கார திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை சிலை வரை பொதுமக்கள் சென்று வர தண்ணீரில் செல்லும் விமான சேவையும் தொடங்கிவைத்த தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரு நபருக்கு சுமார் 4,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 19 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற போதிலும் , 12 பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முதற்கட்டமாக கடல் விமானம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா காலனியில் உள்ள ஒற்றுமை சிலைக்கு செல்லும்.